9.4 C
France
May 20, 2024
பதிவுகள்

அயல்நாடுகளில் தடம் மாற்றப்படுகிறதா தமிழ் கலாச்சாரம்?

ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள், தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகைகளை, அந்தந்த தேதிகளில் கொண்டாட முடியாமல் ( வேலைல லீவ் கிடைக்காது பாஸ், வேறோன்றும் இல்லை) அந்த வார இறுதியில் , ஏரியாவில் வசிக்கும் பிற தமிழர்களோடு கொண்டாடுவது நாம் அறிந்ததே!. பண்டிகைக்கான தார்பரியங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், அறிந்தவர்கள் தெரிந்தவர்களைச் சந்தித்து, கதைகள் பலபேசி, ஒன்றாக உண்டு மகிழ்வது நெகிழ்வைத் தரும்.
அப்படித்தான் நானும் சில வருடங்களாக நவராத்திரி கொண்டாடுகிறேன். (2020- தவிர்த்து).

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சரஸ்வதி பூஜை என்றால், வீடு வாசல் சுத்தம் செய்து, பாட புத்தகங்கள் தொடங்கி, டி.வி, டேப் ரெக்கார்டர் மின்னணு சாதனங்கள் முதல், கத்தி, அருவாள் மனை, கோடாரி, உலக்கை என ஆயுதங்கள் (???) அனைத்தையும் சாமி படத்தின் முன் வைத்து பூஜை செய்வது வழக்கம். அந்த காலத்தில் வாட்சப் ஸ்டேடசில் போட்டோ வைக்கும் பழக்கம் இல்லாததால் என்னவோ அம்மா படையலுக்கு அதிகம் மெனக்கெட மாட்டார்.
கடலை சேர்த்த பொரியும், சர்க்கரை கலந்த அவலும் சாமிக்கு வைத்துவிட்டு, பொரியில் கொஞ்சூண்டு பூந்தி கலந்து நாங்கள் தின்போம். சில சமயம் போனால் போகுதே என்றே சுண்டல் செய்வாங்க. இது மாதிரியான விசேச நாட்களில் ஒரு வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்தால் ‘செழிப்பா’ இருக்காங்க என்று அர்த்தம்.
வியாபாரம் செய்பவர்கள் கடையில் கலர் பேப்பர் ஒட்டி, வாழை மரம் கட்டி மாலையில் சரஸ்வதி பூஜை செய்வார்கள். தொழிலாளர்களுக்கு பரிசுப்பணம் அல்லது புதுத்துணி எடுத்து தருவார்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்து கடைகளுக்கு படையலில் வைத்த பிரசாதம் தருவார்கள். இதுதான் எங்களுக்கு நவராத்திரி.

எங்கள் சொந்த பந்தத்தில், அட சுத்தியுள்ள ஊர்களில் எனக்குத் தெரிந்த யாருமே ‘கொலு’ வைத்தது இல்லை. பெரிய கோயிலில் (சிவன் பார்வதி கோயில்) கொலு வைத்து, மாலை பஜனை நடக்கும். மற்றபடி பிராமணர்கள் வீடுகளில் மட்டுமே கொலு வைப்பார்கள் என்பதே என் புரிதல். (இந்த வாக்கியத்துக்காக யாரும் சொம்பு தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நோ பஞ்சாயத்து… பிளீஸ்)
சென்னையில் வேலை பார்த்தபோது, நவராத்திரி குறித்த என் கருத்து மாறியிருந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடின. ஒவ்வொரு நாளும் எந்த நிறத்தில் புடவைக் கட்டி பூஜை செய்ய வேண்டும், என்ன படையல் செய்ய வேண்டும் என்ற பட்டியல் பரபரப்பானது. இதெல்லாம் வியாபாரத்தின் ராஜதந்திரம் என்பது கூடிய விரைவில் புரிந்தாலும், இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப பெண்களிடம் உடுத்துவதற்கு சொற்ப புடவைகளே இருக்கும். அவர்கள் எப்படி ஒன்பது நாளும் ஒன்பது நிறத்தில் புடவை கட்ட முடியும் என்று கேட்டபோது, மற்றவர்கள் என்னை ‘அட அற்ப பதரே!’ என்று பரிதாபமாக பார்த்தார்கள். பணம் படைத்தவர்கள் கொண்டாடவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன என்பது காலம் செவிட்டில் அடித்து சொல்லித்தந்துவிட்டு சென்றது.

ஐரோப்பா வந்தபிறகு, இன்னும் சில பல அடிகள் விழுந்தன.

‘கம்யூனிட்டி ஹால்’ என்னும் பொது இடத்திலோ, கோயில் மண்டபங்களிலோ நவராத்திரி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘அடடே’ என்று நாமும் குதூகலமாய் போவோம்.
முதலில் துர்கா பூஜை செய்வார்கள். சாமி ரோஸ் பவுடர் போட்டு பளீச் பளீச் வெண்மையில் இருக்கும். ‘’என்னங்க, எங்கூருல சாமிக்கு இப்படி அலங்காரம் பண்ண மாட்டாங்களே?’’ன்னு நாமும் கேட்க மாட்டோம். அப்படியும் மீறிக் கேட்டால், ‘’பிழைக்க வந்த இடத்துல எதுக்கு பிரச்சனை பண்ணிகிட்டுன்னு?’’கூட இருக்கும் நம் குடும்பத்தினர் தட்டி வைச்சிடுவாங்க.

அப்புறம் கன்னத்துல குங்குமம் பூசிக்குவோம். என்ன இந்திபடத்துல வர்ற காட்சிகள் எல்லாம் கண் முன்னே வருதா? அப்படியே எதாவது இந்திப் பாட்டையும் சேர்த்துக்குங்க. ஏன்னா அடுத்து தாண்டியா நடனம் ஆட தேவைப்படும்.
இதுதான் தமிழர்கள் ஐரோப்பியாவில் நவராத்திரி கொண்டாடும் முறை. காலம் காலமாக வடக்கத்திய மக்கள் பின்பற்றும் பாணி இது. ஆனா தமிழ் மக்களுக்கும் திடீர்ன்னு ஏன் இப்படி மாறிவிட்டார்கள் என்பதுதான் ‘புரியாத புதிர்’. தங்களுடைய பாரம்பரிய பழக்கவழக்கத்தை, பூஜை முறையை மாற்றியது மட்டுமல்லாமல், ஏன் அடுத்த மொழி மக்களின் கலாச்சாரத்தை தங்களுக்குள் திணித்துக் கொள்கிறார்கள்?
வளரும் இளைய தலைமுறையும், ஓ… இதுதான் தமிழ் பண்பாடா? என்று தவறுதலாக புரிந்து கொள்வார்களே?. வட இந்திய மக்கள் அவர்கள் விருப்பப்படி கொண்டாடிவிட்டுப் போகட்டும். அதே போல நாமும் அபிராமி அந்தாதி பாடி பூஜை செய்யலாமே என்று சொன்னால் போதும்.
கில்லி பிரகாஷ்ராஜ் மாதிரி, ‘அதெல்லாம் நீ சொல்லக் கூடாது, அதெல்லாம் நீ ஏன் சொல்றே?’ன்னு பொங்கி எழுவார்கள். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்தானே அப்படி வியாக்கியானம் பேசுவார்கள். அப்ப சரி, வடக்கத்தியர்களும் நம்ம முறையில் பூஜை செய்யட்டும் என்று கேட்டால், ‘ஒரு போன் வருது, இங்க சிக்னல் சரியில்ல’’ என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

ஒரு விசயம் உங்கள் புரிதலுக்காக. நான் பிறரின் கலாச்சாரத்தை குறை சொல்லவோ, இழிவாக சொல்லவோ இல்லை. ஒவ்வொரு இனத்துக்கும் அவர்களின் மதம் சார்ந்த வழிபாடுகள், சடங்குகளுக்கு ஒவ்வொரு தனித்த அடையாளம் உண்டு. அதை மாற்றவோ, கலாச்சார ஆக்கிரமிப்பு செய்தோ மாற்றமுடியாது. மாற்றவும் கூடாது. இது என் இனத்தின் பழக்கவழக்கம் காற்றோடு கரைகிறதே என்ற வேதனை மட்டும்தான்.

சரி, தாண்டியா ஆடுவதுதான் நவராத்திரி என்பதைக் கூட நான் ஏற்றுக் கொள்வேன். ஆனா பூஜைக்கு நடுவில், ‘ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதாகீ ஜே’ போன்று கூவுவதைத் தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அன்று புத்தகத்திற்கு பொட்டு வைத்தது போய், இன்று ‘ராம் ராம்’ என்பதில் வந்து நிற்கிறது. அடேய்களா… எங்க கலாச்சாரத்தில் அவரு பெருமாளு!. தட் புரட்டாசி மாசம் ஊரு பக்கம் வந்துபாரு, அப்ப புரியும் மொமண்ட்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட, கால் நூற்றாண்டாகவே, பண்டிகை என்றால், டி.வியில் காலையில் பட்டிமன்றமும் மாலையில் புதுப்படமும் என்று ஆகிவிட்டது. பல வருடங்களாக கோயில்களில் தவில் இசை காணாமல் போய், செண்டை மேளம் ஒலிக்கிறது.

நரகாசுரன் இறந்த தீபாவளி, ‘டீவாளி’ ஆகி பல மாமாங்கம் ஆகிவிட்டது. பிள்ளையார் சதூர்த்தி என்பது…

மன்னிக்கவும், நாம அரசியல் பேச வேண்டாம்.

நாம் மற்றவர் கலாச்சாரத்தை, வழிபாடுகளை தடுக்க வேண்டாம். மாறாக, முடிந்தளவு, நாம் நம் கலாச்சாரத்தை போற்றுவோம். முக்கியமாக, இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.

நன்றி !

லாவண்யா

Author

Related posts

பிரெஞ்சு தேசிய நாள், ஜூலை 14 : வரலாறும் நிகழ்வும்

Editorial

தொல்லியலுக்கு வெளிச்சம் தரும் கீழ்நமண்டி கற்கால நாகரிகம் !

Editorial

கர்னல் தோட்டம்

சரத்

பிரான்சு: நிஜமும் நிழலும் !

Editorial

டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ?

Editorial

அகர முதல !

editor

Leave a Comment