9.4 C
France
May 20, 2024
இலக்கியம்சிறுகதைகள்

கன்னிகழியாச் சாமி

டேய் பாலு, இன்னும் இருபது நாள்ல நான் ஊருக்குப் போகப் போறேன்” என்று சொன்ன குமாரை பாலு வியப்புடன் பார்த்தான். மேலும், ”என்னாடா திடீர்னு” எனக் கேட்டான்.

“இந்தா இந்த கடுதாசியைப் படிச்சுப்பாரு புரியும்” என்றான். பாலு அதைக் கையில் வாங்கினான்.

அது குமாரின் அப்பா போட்டிருந்த கடிதம்; அவர் எழுத்து சிறியதாக இருக்கும். சிறியதென்றால் சின்னஞ்சிறிசாய் இருக்கும். அதுவும் முகவரி பக்கத்திலேயே எல்லாச் செய்திகளையும் எழுதி விடுவார். அவ்வளவு சிக்கனம்; இத்தனைக்கும் கிராமத்தில் நிறைய நிலபுலங்களும் மாடு கன்றுகளும் வைத்திருக்கும் ஒரு நடுத்தரப் பணக்காரர்தாம் அவர்.

குமார் அவருக்கு ஒரே பிள்ளை. இருக்கும் வசதிக்கு வேலைக்கே போக வேண்டாம் என்றாலும் படித்த படிப்பு வீணாகப் போக வேண்டாம் என்று அவன் இங்கே விஜயவாடாவில் வேலைக்கு வந்திருந்தான்

அவன் கிராமமும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில் அமைந்திருந்தது. கடந்த வாரம்தான் அவ்வூருக்கு மின்சாரம் வந்தது. அப்படிப்பட்ட ஒரு குக்கிராமம் அது.

கடிதத்தை வாங்கிய பாலு படித்துப் பார்த்துவிட்டுக் கேட்டான். ”என்னாடா இது? சாமியை உருவாக்கப் போறோம்; நீ கண்டிப்பா வரணும்”னு எழுதியிருக்காரு.”.

”ஆமாண்டா அங்க கிராமத்துல அது ரொம்ப நாளா இருக்கற ஒரு வழக்கம். இந்தத் திருவிழாவுக்கு என்ன மாதிரி கல்யாணம் ஆகாத ஊர் பசங்க எல்லாருமே கண்டிப்பா வந்திடணும்”.

“ஆச்சரியமாயிருக்கே கொஞ்சம் வெவரமாச் சொல்லேன்”

”அதாவது கல்யாணம் ஆகி முதலிரவே நடக்காத பொண்ணுங்க சிலபேரு இருப்பாங்க”

“அது எப்படிடா?”

“ஆமான்டா; கல்யாணம் ஆகி முதலிரவுக்கு முன்னமே அவளோட புருசன் செத்துப் போயிருக்கலாம்ல”

“அதான் கல்யாணத்தன்னிக்கு ராத்திரியே  வச்சிடறாங்களே”

“நீ சொன்னா நம்ப மாட்டே! கல்யாணம் எல்லாம் பத்து மணிக்குள்ள முடிஞ்சிருச்சி; அப்பறம் பொண்ணு மாப்பிளைய கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு சாயந்தரம் வந்திடலாம்னு போனாங்க. என்னாச்சு தெரியுமா? ஊரை உட்டுக் கெளம்பி நாலு மைலுதான் போயிருப்பாங்க; அங்க இருக்கற ஒரு கூட்ரோடு கிட்ட மண் லாரி மோதிடுச்சி!”

”ஐயய்யோ! அப்பறம் என்னாச்சு”

”பாவம்டா; காரில போன மாப்பிள, அவங்களோட அப்பா எல்லாரும் அதே எடத்துல போய்ச் சேந்துட்டாங்க”

”அப்பறம்”

“அதுல என்னா ஒரு கொடுமையின்னா, அந்தத் தாலி கட்டிக்கிட்ட பொண்ணு மாத்திரம் எலும்பு ஒடைஞ்சு உயிர் பொழைச்சிடிச்சு”

“அது என்னா பாவம் செஞ்சுதோ? அதுவும் போயிருக்கலாம்” என்றான் பாலு.

“ஆமாண்டா நீ சொல்றது சரிதான். அந்தப் பொண்ணு நெலமதான் ரொம்பக் கொடுமை”

”எங்க பக்கத்துல நடு ஊட்டுத்தாலின்னு சொல்வாங்க குமாரு. அதாவது ரெண்டாம் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்க”

”எங்க ஊர்ல அது மாதிரி செஞ்சா ஊரை உட்டுத் தள்ளி வச்சிடுவாங்க”

“அப்பறம் என்னா செய்வீங்க”

“அது மாதிரி ஆன பொண்டுகளை எல்லாம் சாமியாக்கிக் கும்பிடுவோம்”

”அப்ப ஊட்ல சேக்கவே மாட்டீங்களா?’

’இல்லடா; அவங்க ஊட்லயேதான் அப்பா அம்மா கூடத்தான் இருப்பாங்க; ஊர்லயே அந்தப் பொண்ணுக்குத் தனி மரியாதை. அதைத்தான் மொதல்ல எல்லாத்துக்கும் கும்பிடுவாங்க; வயல்ல மொத மொதல்ல ஏர் புடிக்கறது, நடவு நடறது, வீட்ல கொழந்தைக்குப் பேரு வக்கறது எல்லாம் அவங்க வந்து மொதல் மரியாதை வாங்கிட்டாத்தான் நடக்கும். ஊர்த்திருவிழாவுல அதுதான் சாமிக்கு மொதல்ல வந்து ஆரத்தித்தட்டு குடுக்கும்; எந்த ஊட்ல கல்யாணம் நடந்தாலும் அதுதான் மொதல்ல தாலி எடுத்துக் குடுக்கும்.”

”அப்ப ஐயரு எடுத்துக் குடுக்க மாட்டாரா?”

”அந்தப் பொண்ணு எடுத்து ஐயருகிட்டக் குடுக்கும்; ஐயர் அப்பறம் மாப்பிள்ளைகிட்ட குடுத்து  கட்டச் சொல்லுவாரு”

”இதென்னடா அதிசயமாயிருக்கு; அறுத்துட்டவங்க கல்யாணத்துக்கு எல்லாம் எங்க ஊர்ல வரவே மாட்டாங்க; அப்படியே வந்தாலும் தனியா ஓரமா ஒக்காந்துதான் இருப்பாங்க; எந்தச் சடங்கிலயும் கலந்துக்க மாட்டாங்க தெரியுமா?”

”அதென்னமோடா, இதான் எங்க ஊர்ல வழக்கம்”

பாலு பதிலேதும் பேசாமல் இருந்தான். அவனுக்கு இந்த வழக்கம் எப்படி ஏன் ஏற்பட்டிருக்கும் என்று யோசனை செய்யத் தோன்றியது. ஒருவேளை அவர்களின் பாதுகாப்புக்காக இருக்குமோ என்று நினைத்தான். அவனை யோசனை செய்ய விடாமல் குமார் பேசினான்.

”சரிடா, நான் போயிக் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று குமார் கிளம்பினான்.

விஜயவாடாவில் பணி என்றாலும் பாலுவும் குமாரும் அந்நகரிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் குடியிருந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

அது ஒரு சிறிய கிராமம்; இன்னும் நகரத்தின் வாடை அங்கு வீசவில்லை. குளிக்க அருமையான ஓர் ஏரி. குமார் குடியிருந்த தெருவின் கடைசியில் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அக்கோயிலிலிருந்து இடப்புறம் திரும்பினால் அரை கிலோமீட்டரில் ஏரி இருந்தது. பதினாறு கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி தரும் மிகப்பெரிய ஏரி அது.

குமார் கரையின் மீது நடக்க ஆரம்பித்தான். மனம் அப்பா எழுதிய கடிதத்திலேயே இருந்தது.

அவன் ஊரில் அண்மையில் திருமணமான பெண்கள் மூன்று பேர். அதுவும் அண்மையில் என்றால் ஆறு மாதத்திற்கும் முன்னர் எனப் பொருள். ஏனெனில் கணவன் இறந்து ஆறு மாதங்கள் கழித்துத்தான் இந்த சாமி உருவாக்கும் சடங்கு நடைபெறும்.

குமார் அந்த மூன்றுத் திருமணங்களுக்குமே செல்லவில்லை. இத்தனைக்கும் அந்த மூன்று வீட்டுக்காரர்களுமே அவனுக்கு மிகவும் வேண்டியவர்கள்தாம். ஒருத்தி அவன் கூடப் படித்தவள் மாலதி. நன்றாகப் பாட்டுப் பாடுவாள்.

“பழமுதிர்ச் சோலையிலே பார்த்தவன் வந்தானடி” என்று அவள் பாடினால் அவள் குரல் கேட்கும் யாரையும் நகர விடாமல் கட்டிப் போட்டு விடும். கூடப் படிக்கும்போது பாட்டுப் போட்டிகளிலே கலந்துகொண்டு பல ஊர்களுக்குப் போய்ப் பரிசுகள் பெற்று வருவாள். ஒவ்வொரு வெள்ளியிலும் கோயிலில் மாலை வேளையில் அம்மன் புறப்பாடு அவள் பாடின பிறகே நடக்கும். அதுவும் மாரியம்மன் பாடல்களை எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் அவள் பாடும்போது கேட்போர்க்கே சாமி வந்துவிடுவது போலவே இருக்கும்.

அதேபோல “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” பாடலை எம்.எஸ் குரலில்தான் பாடுவாள். ஆனால் அவளுக்கு நேர்ந்த குறை மிகப் பெரிதாகி விட்டது. திருமண நாளின் மாலையில் திடீரென மாரடைப்பு வர அவளுக்குக் காலையில் தாலி கட்டியவன் மறைந்து போனான் என அப்பா எழுதியிருந்தார்.

மாலதி எவ்வளவு வற்புறுத்தியும் அவனுக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழல் வந்துவிட அவனால் அவள் திருமணத்திற்குப் போகமுடியவில்லை. இரண்டாவது கயல்விழி. அவனுக்குத் தமிழ் கற்றுத் தந்த தமிழாசிரியரின் மகள்.

”நீதாம்பா வந்து கல்யாண வேலையெல்லாம் பாக்கணும்”னு என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். கடிதங்களும் எழுதினார். ஆனால் அவன் கம்பெனி அவனை அந்தத் தேதி பார்த்துத்தான் மலேசியா போகவேண்டும் எனக் கட்டாயமாகச் சொல்லிவிட்டது. காசு அதிகம் கொடுத்து வைத்திருக்கும் கம்பெனி அடிமையால் மீற முடியுமா? கயல்விழி இப்பொழுது மதுரையில் ஒரு பேராசிரியரின் மனைவியாய் இருக்கிறாள். இதெல்லாம் அவனுக்கு அவன் அப்பா எழுதித்தான் தெரியும். அவன் ஒரு வீம்புக்காக ஊருக்கே போகவில்லை

அந்த இரண்டு திருமணங்களும் பத்து நாள்கள் இடைவெளியில் நடந்தன. அவை நடந்து நான்கைந்து நாள்கள் கழித்துத்தான் பாக்கியம் திருமணம் நடந்தது.

ஏரியின் மதகுக்கரையில் குமார் உட்கார்ந்தான். சூரியன் தன் வெப்பத்தைச் சற்று மென்மையாக்கி விட்டான். பறவைகள் கூடு நோக்கி வரத் தொடங்கி விட்டன. தத்தம் ஆடு மாடுகளுக்குப் புல் அறுக்கச் சென்றவர்கள் தலையில் கட்டுகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தனர். மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் வரிசையாகக் கரை மேல் சென்றன. லேசாக வீசிய காற்று ஏரித்தண்ணீரில் சிறிய அலைகளை ஏற்படுத்தியது. 

அதிலும் பாக்கியம் அவனுக்கு முறைப்பெண். சின்ன வயசிலேந்தே அவனுக்கும் அவளுக்கும் முடிச்சுப் போட்டுத்தான் பேசுவாங்க. பாக்கியத்தைப் பற்றி நினைத்தாலே அவன் மனம் வலித்தது.

“பாக்கியம்தான் எவ்வளவு அழுதா. அவளுக்கும் எல்லாம் தெரியும் இருந்தாலும், ’மாமா ஒன்னை உட்டுட்டு நான் எப்படி இன்னொருத்தருக்குக் கழுத்தை நீட்டுவேன்’ என்று பிழியப் பிழிய அழுதாளே’”

இப்பொழுது நினைத்தாலும் அவனுக்குக் கண்ணீர் வந்தது. “இந்த ஜாதகம்லாம் கண்டுபிடிச்சவங்களைக் கொண்டு வந்து சுடணும். அதுதானே என்னையும் பாக்கியத்தையும் பிரிச்சிட்டுது. இல்லன்னா பாக்கியம் எனக்குத்தானே கழுத்தை நீட்டியிருப்பா. ஜாதகம் பொருந்தலன்னு பாக்கியம் அப்பா சொல்லிட்டு இந்தக் கல்யாணம் வேணாம்னு ஒரே முடிவா இருந்திட்டாரு. நம்ம அப்பா கூட எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு, அதுக்குப் பரிகாரம்லாம் இருக்கு,  செஞ்சுடலாம்னு கூடச் சொன்னாரு ஆனா அவரு ஒத்துக்கவே மாட்டேன்னுட்டாரு. வேற எடத்துல கல்யாணம் முடிவு செஞ்சு நிச்சயம் கூட பண்ணிட்டாரு. குமார் அப்பா நிச்சயம் பண்றதுக்குப் போயிட்டுதான் வந்திட்டாரு. போயிட்டு வந்தவரு கூட, “குமாரு, அது மூஞ்சே சரியில்லடா; பாவம்; அது இன்னும் ஒன்னையே நெனச்சுக்கிட்டு இருக்கு” என்று கண்கலங்கச் சொன்னார்.” நினைக்க நினக்க இப்பொழுது கூட குமாருக்கு மனம் வலித்தது.

மாலை நேரத்தில் கூட வயதுப் பிள்ளைகள் ஆலமரத்தின் விழுதைப் பிடித்து ஊஞ்சலாடி ஏரியில் குதித்துக் கொண்டிருந்தார்கள். கொக்கும் நாரையும் கூடு திரும்பலாமா என யோசித்துக்கொண்டிருந்தன. சூரியனும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் மேற்கே என் வீட்டிற்குச் சென்று விடுவேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான். ஏரியில் தண்ணிர் தளும்பிக் கொண்டிருந்தது. அதன் நடுவில் நங்கூரம் இட்ட கப்பல்களைப் போல் செங்கல் சூளைகள் நின்றுகொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீச குமார் இன்னும் சிறிது நேரம் கரையில் உட்கார்ந்திருக்கலாம் என எண்ணிப் பதிக்கப்பட்டிருந்த கருங்கல்லின் மீது மாறி உட்கார்ந்தான்.

பாக்கியத்திடம் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன் என்று விடைபெறப் போனதை இப்போது நினைத்தாலும் ஏன் போனோம் என்ற நினைப்பே பெரிதாகி அழுகை வந்தது.

”அப்பா சொன்னார் என்றுதான் போனோம். ஆனால் போயிருக்கக்கூடாது.” என்று எண்ணியவன் அவள் திருமணத்திற்குப் போகக்கூடாதென்று அப்பொழுதே முடிவு செய்து விட்டான். அங்கே நடந்தவை எல்லாம் மனக்கண்ணில் ஓடின.  அதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் வடிய அது வடிந்ததுபோக மீதிக் கண்ணீர் திரைபோலக் கண்களில் தேங்கியது. ஏரியில் தலை முழுகும் வரை அக்கண்ணீர் மறையாமல் இருந்தது.

குளித்து முடித்துத் தலையைத் துவட்டிக்கொண்டே அறையில் நுழைந்த குமாருக்கு பாலு சொன்னது ஆச்சரியமாய் இருந்தது.

“குமாரு, நானும் ஒன்கூட ஒங்க ஊருக்கு வரேண்டா”

“என்னாடா திடீர்னு”

”இல்ல; நீயும் ரொம்ப நாளாக் கூப்பிட்டுக்கிட்டே இருக்க. இப்ப வந்தா சாமித் திருவிழாவையும் பாத்த மாதிரி இருக்கும்ல”

“சரி, வா, அப்பாவுக்கு ரெண்டு பேரும் வரோம்னு எழுதிப் போடறேன்”

நெடுஞ்சாலையில் குமாரின் கிராமத்து நிறுத்தத்தில் இரட்டை மாட்டு வண்டி காத்திருந்தது. ஒரு முக்கால் மணிநேரப் பயணத்திற்குப்பின் குமார் வீடு வந்தது.

வாசலிலேயே  அப்பாவும் அம்மாவும் காத்திருந்தனர். ”வா குமாரு.; வா தம்பி” என வாய் முழுக்கச் கிராமத்துச் சிரிப்பாக அவன் அம்மா வரவேற்றார். ”உட்காருங்க” என்று வாசலின் பெரிய திண்ணையில் இருந்த மர நாற்காலிகளைக் காட்டினார் அவன் அப்பா.

“கோபாலு,  ரெண்டு பைகளையும் எடுத்திட்டுப் போயி உள்ள வை” என்று வேலையாளிடம் சொல்லி அம்மா உள்ளே சென்றார். அவர் திரும்பவும் வந்து “ஏங்க அதுக்குள்ள பேச ஒக்காந்துடாதீங்க; மொதல்ல ரெண்டு பேரும் பல் விளக்கிட்டுக் காப்பி குடிக்கணும்” என்றார். அவன் அப்பாவும் “ஆமாம்பா; நேர கொல்லைக்குப் போயிக் கெணத்தடியில பல் வெளக்கிட்டு வாங்க” என்றார்.

குமாரும், பாலுவும் வந்து உட்காரவும் அம்மா பளிச்சென்று இருந்த இரண்டு பித்தளைத் தம்ளர்களில் காப்பி கொண்டுவந்து கொடுத்துக் கீழே உட்கார்ந்தார். நகரப் பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் மிதிவண்டியில் செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்களைப் பார்த்துக்கொண்டே பாலு காப்பியைக் குடித்து முடித்தான்.

”ஏம்பா எங்க கிராமத்துக் காப்பி எப்படி இருக்கு? என்று அப்பா கேட்டார்.

”சுத்தக் கலப்படம் இல்லாத பசும்பால் காப்பி இல்ல. பிரமாதமா இருக்கு “ என்றான் பாலு.

குமார் குடித்து முடித்துக் கீழே தம்ளரை வைத்தவன், “ஏம்பா, இந்தச் சாமி வழக்கத்தைக் கொஞ்சம் மாத்தக் கூடாதா” என்று கேட்டான்.

“என்னா செய்யலாம்”

“மாலதி தான் நல்லா பாடுவா; அவளக்  கோயில்ல பாட்டுப் பாடவைக்கறதோட நிறுத்திக்கலாம்ல. இந்தச் சாமி எல்லாம் வேணாம்ல” என்றான்.

அப்பா பதிலேதும் சொல்லாமல் தெருவில் கலப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு போனவரைப் பார்த்தார். அம்மா கீழே குனிந்து கொண்டு இருந்தார். எல்லாரும் பேசாமல் இருக்க அம்மா கண்களில் இருந்து நீர் சிந்தியது போல இருந்தது.

அதைக் கவனித்த குமார், “என்னாம்மா” எனக்கேட்டான். கண்களைத் துடைத்துக்கொண்டே ஒண்ணும் இல்லப்பா” என்றார் அவர். ”சொல்லும்மா” என்று அவன் மறுபடி கேட்டான்.

அவர் தலை நிமிராமல் மெல்லிய குரலில் “மாலதி மட்டும் இல்லப்பா” என்றார். “அப்பறம் வேற யாரு?” என்றான் குமார். அதற்கு உடனே பதில் சொல்லாமல், “பாக்கியமும் சாமியாகப் போறா” என்றவர் தேம்ப ஆரம்பித்தார். “என்னாம்மா சொல்ற” என்று உரத்துக் கேட்ட குமார் எழுந்து அம்மாவைக் கட்டிக்கொண்டான். இருவரும் அழ ஆரம்பித்தனர்.

பாலு கிராமத்து உறவின் அருமையை நினைக்க அவனுக்குக் கண்ணீர் வரும் போல இருந்தது. அப்பாவும்  முகத்தை மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கண்ணீரை அடக்கிக் கொண்டார்.

ஒரு வழியாய் தேறிய குமார் ”எப்படிப்பா” என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டான். “பாம்பு கடிச்சுட்டுதுப்பா” என்றார் அப்பா.

”கொஞ்சம் வெவரமாச் சொல்லு”

“என்னாத்த சொல்றது. கல்யாணம் எல்லாரும் கண்ணுப் போடற மாதிரி நல்லா நடந்துச்சு. நீ இல்லாததுதான் கொறை. எல்லாரும் முடிஞ்சு ஊருக்குப் போனாங்க. ராத்திரி சாப்பாடெல்லாம் ஆனதுக்கப்பறம் தோட்டத்துக்குப் போயிட்டு வரேன்னு போனாரு மாப்பிள்ளை. போனவரை ரொம்ப நேரமா காணோமேன்னு பாக்கியம் அப்பா போயிப் பாத்தாரு. பாத்தா தோட்டத்துல விழுந்து கெடக்காரு வாயெல்லாம் நுரை. வந்து பாத்த நாட்டு வைத்தியரு ”விரியனுங்க; கடிச்ச ஒடனே போயிடுச்சுங்க”ன்னு சொல்லிட்டான்

 குமார் பித்துப் பிடிச்சவன் போல் உட்கார்ந்து விட்டான். ஓரளவுக்குப் பாக்கியத்தைக் குமார் விரும்பியது எல்லாம் பாலுவுக்குத் தெரியும். ஆனாலும் குமாரை  என்ன சொல்லித் தேற்றுவதென்று பாலுவிற்குத் தெரியவில்லை. சிறிது நேரம் மேலே கூரையைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் திடீரென எழுந்து உள்ளே போனான். சட்டையை மாட்டிக்கொண்டு வந்தான்.

“எங்கடா போறே?” என்று கேட்டார் அம்மா.

“பாக்கியம் வீட்டுக்குத்தான்”

”ஏன் இப்ப எதுக்கு அங்க போற?”

“அவ அப்பாவைப் பாத்து நாலு கேள்வி கேட்டுட்டு வரத்தான்”

“என்ன கேக்கப்போறடா” என்றார் இதுவரை பேசாமலிருந்த அப்பா.

”நல்லா ஜாதகம் பாத்துச் செஞ்சீங்களே; இந்தக் கல்யாணம் என்னாச்சுன்னு கேக்கத்தான்”

பட்டென்று அம்மா சொன்னார். “அவங்களே இப்பதான் கவலையிலேந்து மீண்டு வந்திருக்காங்க. அவ சாமியாகற வரையில நீ போயி அவளைப் பாக்கக் கூடாது.”

கொஞ்ச நேரம் சும்மா தரையைப் பார்த்துக் குனிந்துகொண்டிருந்த குமார், மெதுவாக, “ஆமா, இதுக்கு பாக்கியம் எப்படி ஒத்துக்கிட்டா?” எனக் கேட்டான்.

“ஏண்டா கேக்கற; அவளுக்கும் ஊர் வழக்கம் தெரியும்ல?”

”இல்லம்மா, அது வந்து…..”என்று இழுத்தான் குமார்.

“அவ்வளவு சீக்கிரத்துலயா அவ ஒத்துக்கிட்டா. ஊர் பழக்க வழக்கம்னு சொல்லி இல்லன்னா ஊருல கட்டுப்பாடு செஞ்சு ஒதுக்கிடுவாங்கன்னு சொல்லிச் சம்மதிக்க வச்சோம்”

”அதுக்காக ஒத்துக்கிட்டாளா?”

அம்மாவுக்குக் கோபம் வந்ததுபோல் இருந்தது. “என்னா சும்மா நீ நோண்டி நோண்டிக் கேக்கற? அவளும் ரெண்டு தடவ பூச்சி மருந்து குடிச்சுட்டா; காப்பாத்தினது பெரிய வேலயா போச்சு” என்றார் அவர்.

பாக்கியத்தின் குரலும் குணமும் அழகும் அவன் உள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்தன.

”நான்தான் கல்யாணத்துக்கு வரலயே? ஏம்பா எனக்கு ஒடனே எழுதல?’ என்று கேட்டான்.

”நாங்கதான் மனசு கஷ்டத்துல இருக்கோம்; ஒன்னயும் ஏன் கஷ்டப்படுத்தணும்தான் எழுதல” என்றார் அவர்.

யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அரைமணி நேரம் அங்கே மௌனம் நிலவியது.

“என்னா புள்ள வந்திட்டானா?” என்று விசாரித்துக் கொண்டு சென்றவர்களுக்கும் அவன் அப்பா வெறுமனே தலையாட்டினார். அவன் அம்மா அந்த நிசப்தத்தை உடைத்தார்.

”சரிடா, போயி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க. தோசை ஊத்தறேன். சாப்பிடலாம்” என்றார். “குளம் நெறைய தண்ணி இருக்குடா, அங்க போயிக்கூட குளிக்கலாம்” என்றார் அப்பா.

குளத்தில் இரண்டு படிக்கட்டுகள்தாம் மூழ்காமல் இருந்தன. அவ்வளவு தண்ணீர் இருந்தது. காலை வெயில் இதமாக இருக்க, இருவரும் கருங்கல் படிக்கட்டில் உட்கார்ந்தனர்.

”குமாரு நான் நாளைக்கே ஊருக்குப் போறேண்டா” என்றான் பாலு.

“என்னாடா ஆச்சு? எல்லாத்தையும் பாக்கறதுக்குன்னு வந்துட்டு இப்ப போறேன்னு சொல்ற?”

“இல்லடா, மனசே சரியில்ல; எதையும் பாக்க வேணாம்”

”டேய், அவசரப்படாத. இன்னும் ரெண்டு நாளு வெள்ளிக்கெழமை சடங்கைப் பாத்துட்டுப் போயிடலாம்”

“என்னாடா சடங்கு; எனக்கு நீ படற வேதனைப் பாக்கத்தான் முடியல”

சிறிது நேரம் சும்மா இருந்த குமார் சொன்னான்.

”ரெண்டு நாள்ள எல்லாம் சரியாயிடும். வந்ததுதான் வந்த, நீ இருந்திட்டு என்னோடயே திரும்பிப் போலாம்”

சிறிது நேரம் குளத்து நீரில் துள்ளுகின்ற மீன்களையும் அதைக் கொத்த வருகின்ற சிறு பறவைகளையும் இருவரும் பார்த்திருந்தனர்.

பேச்சை மாற்றுவதற்காக “ என்னா சடங்கெல்லாம் செய்வாங்க?” என்றான் பாலு.

”வெள்ளிக்கெழமை காலைல இதேபோல இருக்கற சாமிங்க போயி சாமியாகப் போற பொண்ணுக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க. இந்த ஊர்ல அதே மாதிரி சாமி இருக்காங்களா?”

”நான் பொறக்கறதுக்கு முன்னாடி சாமியானவங்க ஒருத்தரு இருக்காங்க; இப்ப அந்தச் சாமிக்கு வயசு எழுபதுக்கு மேல இருக்கும்”

“சரி அப்பறம்?”

”புது பட்டுப்புடவை கட்டிப் அலங்காரம் செஞ்சு பூ வச்சு…” என்று குமார் சொல்லும்போது குமார் குறுக்கிட்டான்.

“பூ வைப்பாங்களா?”

“ஆமாண்டா. சாமியாயிடறங்க இல்ல? அப்பறம் சாயந்திரமா மேள தாளத்தோட சாமியாகப் போறவங்களை ஊர்வலமா அம்மன் கோயிலுக்கு அழைச்சிக்கிட்டுப் போவாங்க; அப்ப ஊர்ல எல்லா ஊட்லயும் இருக்கறவங்க பெரியவங்க, சின்னவங்க எல்லாரும் அவங்க கால்ல விழுந்து கும்பிடுவாங்க; கோயிலுக்குப் போனதுக்கப்பறம் அம்மனுக்கு சாமியாகப் போறவங்களே அபிஷேகம் செஞ்சு அலங்காரம் செய்வாங்க”

”இனிமே தெனம் அம்மனுக்கு அவங்கதான் செய்வாங்களா?”

“இல்ல, இல்ல; அன்னிக்கு ஒரு நாளு மட்டும்தான். அத்தோட சடங்கு முடிஞ்சு அவங்க கன்னி கழியாச் சாமியாயிடறாங்க: அவங்க கையால எல்லாருக்கும் சக்கரைப் பொங்கல் பிரசாதமா குடுப்பாங்க. அதான்”

இரண்டு நாள்களும் குமாரும் பாலுவும் காலையில் பக்கத்து நகரத்துக்குப் போனவர்கள் இருட்டிய பிறகுதான் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

வெள்ளிக்கிழமை வந்தது. காலையிலிருந்தே குமாரின் அம்மா குமாரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் அப்பாவும் அம்மாவிடம், ஏதாவது சொல்லி அவனைக் கெளப்பி உட்டுடாதே” என்று சொல்லி இருந்தார்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே குமார், “நான் வந்து கால்ல உழமாட்டேன். அந்தக் கோலத்துல அவளப் பாக்க என்னால முடியாது” என்று சொல்ல, அம்மா அவன் தலையைக் கோதியபடி “இல்லடா தம்பி; ஊர் மொறமைன்னு ஒண்ணு இருக்கில்ல, அதை மட்டும் செஞ்சுட்டுப் போயிடு” என வருத்தத்துடன் சொன்னார்.

“என்னாம்மா எதுவுமே மொறைப்படியே நடக்கலயே? ஒனக்கு ஒண்ணும் தெரியாதும்மா” என்று அழுதுகொண்டே கூறிய குமாரிடம் ”வேணாம் குமாரு இதை நீ செஞ்சுதான் ஆகணும்” என்று சொல்லிவிட்டுப் போய்விடக் குமார் குப்புறப் படுத்துக் கொண்டு அழத் தொடங்கினான். பாலுவிற்கு எதுவுமே செய்யத் தெரியவில்லை.

மாலை நேரம் வந்தது.

மேளதாளத்துடன் ஊர்வலம் கிளம்பி விட்டதை வெடிச் சத்தம் சொன்னது.

உள்ளே இருந்த குமாரிடம், “டேய் வாசலுக்கு வா. நம்ம தெரு முனையில வந்தாச்சு” என்று அப்பா சொல்ல, குமார் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான். பாலு அவனைப் பிடித்துக்கொண்டு வந்தான்.

மாலதியின் முகத்தில் சோகம் அதிகமாகத் தெரிந்தது. பாக்கியத்தின் முகம் மிக இறுக்கமாக இருந்தது. குமாரின் வீடு நெருங்க நெருங்க பாக்கியம் பதற்றமாவதை மாலதி உணர்ந்து கொண்டாள். ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே?

குமாரின் வீட்டு வாசலில் எல்லாரும் நிற்பதைப் பாக்கியம் பார்த்தாள். முகத்தில் ஆத்திரம் வந்தது.

குமாரின் அப்பாவும் அம்மாவும் பாக்கியத்தைச் சுற்றி வந்து காலில் விழுந்து வணங்கினர்.

“போப்பா” என்று அம்மா சொல்லியபின் குமார் வந்ததைக் கவனித்த பாக்கியம் அவன் அவளை வலம் வந்து காலில் விழும்போது சற்று நகர்ந்தவள், “இல்ல, இல்ல, நான் சாமி இல்ல” என்று உரத்த குரலில் அழுகையுடன் கூறிக் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி வீசியவள் திரும்பி வந்த வழியே ஓடினாள்.

திகைத்த கூட்டம் அவள் பின்னால் ஓடியது.      

  • வளவ. துரையன்

Author

Related posts

மூப்பறியா மூதுரை மூதாட்டி: “ஔவை” !

Editorial

கிழிந்த இலை போதும் !

Editorial

கோப்பையில் தெரிவது!

Editorial

அணையா நெருப்பு

வளவ. துரையன்

நுண் கதை – 10 : பார்தீ

Editorial

மெய்போலும்மே மெய்போலும்மே!

Leave a Comment