9.4 C
France
May 20, 2024
information-politics-privacy-internet-world-vinoth-aarumugam
கட்டுரைகள்

தகவல் அரசியல் : வினோத் ஆறுமுகம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், குறைக்கவும் கூகுள் நிறுவனம், தன் எதிரியான ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து அரசுக்கும் உதவும் வகையில் கான்டேக்ட் ட்ரேசிங் செயலிகளை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் ஒரே நேரத்தில் கூகுளின் ஆன்ட்ராய்ட் போன்களுக்கும், ஆப்பிள் நிறுவன போன்களுக்குமிடையே தகவல் பரிவர்த்தனை நிகழ்த்தும் விதமாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த செயலியின் உதவியால் கோவிட்19 தாக்கப்பட்ட ஒருவர் சோதனைக்கு முன் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம், அந்நபர்களை உடனடியாக கண்காணித்து சோதித்து அறியவும், மேலும் பரவலை தவிர்க்கவும் இந்த செயலி உதவும்.

ஒருபக்கம் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் போட்டி, ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலருக்கும் இதில் மகிழ்ச்சி தான் என்றாலும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது என்று எட்வர்ட் ஸ்னோடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம் “கோவிட் 19 உலக மக்கள் எதிர்கொள்ளும் மிக பெரிய சவால். இது மனித குலத்தின் மிக சோதனையான காலம் தான். ஆனால் மக்கள் ஒன்றுபட்டு இதை எதிர்கொண்டு போராடி வெளியே வருவார்கள். நிச்சயம் விரைவில் கொரோனாவை நாம் வீழ்த்துவோம். ஆனால் கரோனா பயம் காரணமாக நாம் பல தகவல்களை இப்போதே அரசுக்கும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கும் அள்ளி கொடுத்துள்ளோம், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பும் காலத்தில் அவர்கள் இந்த தகவல்களை தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என என்ன நிச்சயம்?’ என கவலை தெரிவித்துள்ளார்.

எட்வர்ட் ஸ்னோடனின் இந்த கவலை உங்களுக்கு உண்மையாக கவலையளிக்க வேண்டுமென்றால் எட்வர்ட் ஸ்னோடன் யார் என்று நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என காரணம் காட்டி சொந்த நாட்டு மக்களின் மின்னஞ்சல்கள் முதல் ஃபோன் கால்கள் வரை இரகசியமாக உளவு பார்த்தது. இந்த ரகசிய உளவு பணியின் மென்பொருள் பிரிவில் வேலை செய்த ஸ்னோடன் மிகவும் வருத்தமடைந்தார். அமெரிக்க மக்களுக்கு தங்கள் அரசால் தாங்கள் உளவு பார்க்கப்படுவது தெரிய வேண்டும் என பல லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை உதறிவிட்டு அமெரிக்காவில் இருந்து தப்பியோடி, உலகிற்கு இந்த ரகசிய உளவை வெளிப்படுத்தினார். பின்னால் அமெரிக்க அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தேவையற்ற ரகசிய உளவுகளை நீக்கியது. ஆனால் எட்வர்ட் ஸ்னோடனை அமெரிக்காவின் தேசவிரோதி என அறிவித்தது.

இன்று ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள ஸ்னோடன், அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கண்காணிப்புகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

அவரின் முதல் சந்தேகமே கூகுளும் ஆப்பிள் நிறுவனமும் தங்கள் போட்டியை மறந்து இணைவது தான். அவர்கள் ‘கான்டேக்ட் ட்ரேசிங்’ (contact tracing) எனும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தான் மேலும் சிக்கல் கொடுக்கிறது என்கிறார் ஸ்னோடன்.

ஏற்கனவே சீனா அரசு கோவிட் 19னால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை முன்னுக்கு பின் முரணாக தான் கொடுக்கிறது. அந்த நாட்டில் அனைத்து தகவல் தொடர்பும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உண்மை நிலவரம் உலகிற்கு தெரியவில்லை. சீன மக்கள் ஏற்கனவே பல டிஜிட்டல் கண்காணிப்புகளின் கீழ் தான் வாழ்கிறார்கள்.

சீனாவின் அருகிலிருக்கும் தாய்வான் நாட்டில் கொரோனா பரவலின் போது அரசு உருவாக்கிய செயலிகள் மூலம், கிட்டத்தட்ட மக்களை ஒரு சிறைச்சாலையில் தான் வைத்திருந்தது. தைவானில் மக்களின் ஃபோன்கள் கிட்டத்தட்ட ‘டிஜிட்டல் விலங்குகளாக’ மாறிப்போனது.

இந்த கான்டேக்ட் ட்ரேசிங் எனும் தொழில்நுட்பம் தங்களின் விளம்பர வருமானங்களை இரட்டிப்பாக பயன்படுத்தப்படுகிறது. ப்ளுதூத் லோயர் எமிஷன் (LE) எனும் வன்பொருளும், பிகானிங் டெக்னாலிஜி எனும் தொழில்நுட்ப  இணைவின் மூலம், அருகிலிருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை தொடர்பு கொண்டு தகவல் பரிமாறி கொள்வதுதான் இந்த முறை. இதைப் பயன்படுத்தி ஒரு நபரின் தொடர்புகளை கண்காணித்து, தகவல் சேர்த்து, எச்சரிப்பது தான் கான்டேக்ட் ட்ரேசிங்.

அதாவது ஒருவரின் ஸ்மார்ட் போன் அருகில் இருப்பவரின் ஸ்மார்ட்போன்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும். இதை சேமித்து வைத்துக்கொள்ளும். பின் அரசின் செயலியில் ஒரு நபர் தனக்கு கொரோனா இருப்பதாக உள்ளீடு செய்தால் போதும், கடந்த சில நாட்களாக அவர் அருகில் சென்ற ஸ்மார்ட்போன்களின் தகவல்களை ஏற்கனவே சேமித்து வைத்த தரவு தளத்திலிருந்து எடுத்து, அவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் எச்சரிக்கை அனுப்பும். ஆனால் இதில் ஒருவரின் அந்தரங்க தகவல்களையும் திரட்ட மாட்டோம் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த முறை பெரிய வெற்றி பெறாது என இதை ஏற்கனவே அமல்படுத்திய சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. ஆனாலும் கூகுள், ஆப்பிள் விடுவதாக இல்லை.

பயத்தை வைத்து ஏற்கனவே உலகம் முழுவதும் அனைவரும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களூடன் இந்த பெருநிறுவங்களும் சேர்ந்துக்கொண்டு அந்தரங்க தகவல்களை அறுவடை செய்துவிட்டால் வருங்காலத்தில் என்ன செய்வது?

சரி, இருக்கும் அரசுகள் தவறு செய்யாது. நாளை ஒருவேளை சர்வாதிகாரிகள் ஆட்சிக்கு வந்து அவர்களிடம் இந்த தகவல்கள் கிடைத்தால் என்ன செய்வது?. அவர்களிடம் இந்த தகவல்கள் செல்லாது என யார் அதைக் கண்காணிப்பது. இந்த நிறுவனங்களையும், அரசையும் யார் கேள்வி கேட்பது.

இப்போது கொரோனாவை வைத்து மிக கச்சிதமான அடக்குமுறைக்கான கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவங்களும், தகவல்களும் அந்த அடுக்குமுறை கருவியை இன்னும் மேம்படுத்தவே செய்யும். என எச்சரித்துள்ளார் ஸ்னோடன்.

கொரோனாவை வெல்லும்போது மக்கள் அடிமையாகி விட்டிருக்கக்கூடாது, அவர்களின் சுதந்திரத்தை காப்பாற்றிக்கொள்வதும் அவர்களின் கையில் தான் உள்ளது.

வினோத் ஆறுமுகம்

Author

Related posts

2022ஆம் ஆண்டின் சில தலைசிறந்த நிகழ்வுகள்

Editorial

ஆண்டவன் மீது ஆணையாக!

மோனாலிசாவின் மாயப்புன்னகை !

சரத்

புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ்

Editorial

பெண்கள் குழாயடி சண்டை போட வேண்டும் !

Shalin Maria Lawrence

ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் !

Editorial

Leave a Comment