8.1 C
France
March 28, 2024
கட்டுரைகள்

09/11/2001 – ஒரு பதிவு

அமெரிக்க மக்கள், வழக்கமான ஒரு செவ்வாய் கிழமையாகத்தான் அன்றைய விடியலையும் வரவேற்றனர். ஆனால் அமெரிக்க வரலாற்றின் கருப்பு நாளாக அது உருமாறப் போகிறது என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

உலக மக்கள் அன்று ஒரு சேர நடுக்கத்துடன் உச்சரித்த ஒரு வார்த்தை,

‘ஒசாமா பின்லேடன்’.

ஒரே நாளில் உலக நாடுகள் தேடப்படும் பயங்கரவாதியாக உருவெடுத்திருந்தான் பின்லேடன்.

அமெரிக்கன் – 11, யுனைடெட் – 175, அமெரிக்கன் – 77, யுனைடெட் – 93 என ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்படுவது உலக வரலாற்றில் அதுவே முதன்முறை.

வளர்த்து விட்ட கிடாவே மார்பில் பாய்ந்த கதை தான், அமெரிக்காவிற்கும் பின்லேடனிற்கும் உள்ள தொடர்பு. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

அமெரிக்காவுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என முடிவெடுத்து, பின்லேடன் குறித்த அந்த நாள் தான் – 09/11/2001.

நாள் குறித்தாகி விட்டது சரி.

திட்டம் என்ன?

வழக்கம் போல வெடிகுண்டுகளை வைத்து அலற விடலாமா?
உயர்ரக துப்பாக்கிகளை வைத்து திடீர் கொலை வெறி தாக்குதல் நடத்தினால் என்ன?

நீண்ட நேரம் யோசித்த பின்லேடனின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு.

‘விமானம்…’

ஆம். விமானம் தான்.

விமானத்தில் வெடிகுண்டா?

‘இல்லை..விமானமே தான் வெடிகுண்டு.’

பின்லேடன் குறித்து வைத்த அந்நாளும் வந்தது.

நேரம் காலை 7.45.

பாஸ்டனிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்கன் – 11 விமானம்.

பயணிகள் மொத்தம் 78, விமான சிப்பந்திகள் 08, முகமது அட்டா ( Mohamed Atta ) உட்பட 05 பயங்கவாதிகள் என மொத்தம் 91 பேர் அதில் ஏறினர். அது தான் தங்களின் கடைசிப் பயணம் என்பது அந்த பயங்கரவாதிகளுக்கு தெரிந்திருக்கலாம். மற்றவர்களுக்கு இல்லை.

சரியாக எட்டு மணிக்கு புறப்பட்டது அமெரிக்கன் – 11 விமானம். அதுவரை எல்லாம் சரியாகவே இருந்தது. ஆனால் விமானம் புறப்பட்ட பதினைந்தாவது நிமிடத்தில், அதாவது 26,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, நாசக்கார்கள் தங்களின் வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

பயங்கரவாதிகள் ஐந்து பேரில் முகமது அட்டாவுக்கு மட்டும் தான் விமானம் ஓட்டத் தெரியும். திடீரென எழுந்த அவன், அருகில் இருந்த பணிப்பெண்களை தாக்கிவிட்டு, விமான ஓட்டிகள் இருக்கும் காக்பிட்டை ( Cockpit ) நோக்கி ஓடினான்.

அதற்குள் விமானத்தில் இருந்த மற்ற பயங்கரவாதிகள், பயணிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். விமான ஓட்டுனர் ஜான் ஓகோனோவ்ஸ்கியை ( John Ogonowski ) கொலை செய்த முகமது அட்டா, விமானத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மிகவும் எளிதாக கொண்டுவந்தான்.

தாறுமாறாக பறந்து வந்த அந்த விமானம், சரியாக 8.45 க்கு நியூ யார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தில் மோதியது.

இது நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சரசொட்டா என்னும் இடத்தில் இருக்கும் ‘எம்மா இ. புக்கர்’ என்ற தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களை சந்திக்க சென்றிந்தார்.

‘உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது, சிறிய விமானம் ஒன்று மோதிவிட்டது’ என்ற தகவல் மட்டும் அதிபர் புஷ்ஷிடம் சொல்லப்பட்டது.

ஏதோ ஒரு சிறிய விமான விபத்து போல என்று அதிபர் புஷ் நினைத்திருக்க கூடும். அதிபர் புஷ் மட்டுமல்ல, சம்பவம் நடந்தேறிய இடத்தில் இருந்தவர்கள் கூட அதைத் தான் நினைத்திருப்பார்கள். அமெரிக்க முன்னனி செய்தி தொலைக்காட்சிகள் கூட அப்படித் தான் முதலில் செய்தியை ஒளிபரப்பின.

என்ன நடக்கிறது என்றே தெரியாமல், புழுதியின் நடுவிலும் புகை மூட்டத்தின் குறுக்கிலும் ஓடிக் கொண்டிருந்த மக்களுக்கு, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

சரியாக 9 மணி அளவில், அதாவது முதல் தாக்குதல் நடந்து அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இரண்டாவது விமானமான யுனைடெட் – 175, அமெரிக்க வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை ஆக்ரோஷத்துடன் தாக்கியது.

அதிபர் புஷ்ஷுடன் ‘எம்மா இ. புக்கர்’ தொடக்கப் பள்ளியில் இருந்த, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஆண்ட்ரூ கார்டுக்கு ( Andrew Card ) அந்த தகவல் வர, உள்ளே மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் புஷ்ஷை நோக்கிப் பார்த்தார்.

அப்போது The Pet Goat எனப்படும் புத்தகத்தை அங்கிருந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் அதிபர் புஷ் படித்து காட்டிக் கொண்டிருந்தார். ( Zig Engelmann எழுதிய அந்த புத்தகம் இதனாலேயே பின்னாளில் பிரபலம் ஆனது ).

மெல்ல உள்ளே சென்ற ஆண்ட்ரூ, அதிபர் புஷ்ஷை இடைமறித்து,

‘President. A Second Plane Has Hit The Second Tower. America Is Under Attack’

( இரண்டாவதாக வேறொரு விமானம், வர்த்தக மைய கட்டிடத்தை மோதியுள்ளது. அமெரிக்க நாடு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது) என்றார்.

அப்போது வெள்ளை மாளிகை புகைப்பட கலைஞரின் கேமராவில் பதிவாக புகைப்படம் தான் இது.

அந்த செய்தியைக் கேட்ட அதிபர் புஷ், சிறுது நேரம் அமைதி ஆனார். அதற்கு மேலும் மாணவர்களின் முன்னால் அவரால் இயல்பாக உட்கார முடியவில்லை.

‘அதிபர் புஷ்ஷின் முகம் சிவந்திருந்தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்பதை அவரின் முகமே காட்டிக் கொடுத்தது’ – சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சொன்ன வார்த்தைகள் இவை.

மூன்றாவது தாக்குதலாக, சரியாக 9.35 மணிக்கு அமெரிக்கன் – 77 விமானம், அமெரிக்க பாதுகாப்புத் துறை வாளாகமான பென்டகன் மீது மோதியது.

அடுத்து சரியாக 10 மணி அளவில் நான்காவது விமானமான யுனைடெட் – 93, பென்சில்வேனியா பகுதியில் உள்ள ஷாங்க்ஸ்வில் ( Shanksville ) என்ற இடத்தின் வெட்டவெளியில் மோதி நொறுங்கியது.

நான்கு விமானங்களையும் சேர்த்து, 19 பயங்கரவாதிகள் உட்பட 264 பயணிகள் இறந்தனர்.

தரையில் இறந்த மக்களின் எண்ணிக்கை, மூவாயித்தை தொட்டது.

இது ‘பெர்ல் ஹார்பர்’ தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.

‘உலகின் பாதுகாப்பான நாடு’ என அதுவரையில் நம்பப்பட்ட அமெரிக்காவுக்கு, ‘9/11 தாக்குதல்’ மிகப்பெரிய ஒரு அடியாகவே இன்று வரையிலும் இருக்கிறது.

  • சரத்

Related posts

ChatGPT : ஓர் அறிமுகம்

Editorial

புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ்

Editorial

பெண்கள் குழாயடி சண்டை போட வேண்டும் !

Shalin Maria Lawrence

புதுவையில் பெண்ணுரிமை காக்க பாேராடிய பெண் போராளி!

Editorial

பிளாக் செப்டம்பர் – சரத்

Editorial

ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் !

Editorial

Leave a Comment