Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home2/jasp4913/fr/vanakkamfrance.fr/wp-config.php on line 176
கோப்பையில் தெரிவது! | Vanakkam France
29.2 C
France
July 19, 2024
vanakkam-france
சிறுகதைகள்

கோப்பையில் தெரிவது!

அதிகாலையில் எழும் போது நேற்று இருந்தளவுக்கு இன்று வலி இல்லை என்ற எண்ணமே சுபிக்கு தெம்பைத் தந்தது. உடல் இன்னும் அலுப்பைச் சுமந்திருந்தாலும், இரண்டு நாட்களாக கலைந்து கிடந்த வீட்டை முதலில் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். கணவன் காப்பி குடித்த டம்ளர், சோபாவுக்கும் சுவற்றுக்குமான இடைவெளியில் ஏடு படிந்து கேட்பாரற்று கிடந்தது. கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், எதுவும் கேட்க முடியாது. (அப்படியே கேட்டாலும் புரிந்து கொள்ளாத ஜென்மம் என்பது வேறு விசயம்).

பெற்று 27 வருடங்களாக வளர்த்த அம்மாவால் கூட, மகனை வீட்டில் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய வைக்க முடியாதபோது, திருமணம் முடிந்த அதே 27 மாதத்தில் தன்னால் மட்டும் என்ன செய்துவிட முடியும் என சலித்துக் கொண்ட மனதை ஒரு கப் சுடுதண்ணீர் குடித்து அடக்கிவிட்டு, சமைக்கத் துவங்கும் போதுதான் அந்த சத்தம் கேட்டது.

யாரோ முனகுவது போல!

கூர்ந்து கவனித்தால் அழுகையின் குரலாய் ஒலித்தது. வீட்டில் கணவனும் இல்லை. ஐ.டி. கம்பெனி ஷிப்ட் முடிந்து மதியம் 12க்குத்தான் வருவான். ஒன்றரை வயது மகளும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. வேறு எங்கிருந்து சத்தம் வருகிறது? யோசிக்கும் போதுதான் நேற்று காலையிலேயும் இதே போன்ற ஒன்றைக் கேட்டது நியாபகத்துக்கு வந்தது. அருகிலிருக்கும் பிளாட்களில் இருந்து இதுவரைக்கும் எந்த சத்தமும் கேட்டதில்லை. அப்போ நிச்சயமாக தன் வீட்டிலிருந்துதான் இந்தக் குரல் ஒலிக்கிறது. இதுவரைக்கும் பார்த்த அத்தனை பேய் படங்களுக்கும் கண்ணுக்குள் வந்து போக, திக்கென்று நெஞ்சம் திடுக்கிட்டாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் பரபரப்பாக சமைத்து முடித்தாள்.

அதற்குள் தியா குட்டி எழுந்துவிடவே, மகளைக் குளிப்பாட்டி, சாப்பாட்டு ஊட்டி, டே கேரில் விட தயார் செய்தாள். இப்போது தெளிவாகவே அந்தக் குரல் கேட்டது. எதையோ பறிகொடுத்தவரின் ஏக்கமான அழுகை அது.

கைகால் உதற, மகளைக் அள்ளிக்கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். வாசலில் அந்தக் குரல் தெளிவாக, இன்னும் பலமாகக் கேட்டது. யாரோ எங்கேயோ அழறாங்க என்றபடி மனதைக் தேற்றிக் கொண்டு, மகளை டே கேரில் விட்டுவிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்குச் சென்றாள் சுபி.

மாலை வீடு வரும் போது, கணவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இன்றும் நைட் ஷிட் என்பதால் இரவு 9 மணிக்கு எழுப்பிவிடச் சொல்லி மதியமே குறுந்தகவல் அனுப்பியிருந்ததால், அவனைத் தொந்தரவு செய்யாமல் வழக்கம் போல மகளுடன் விளையாடியபடியே மிச்சமிருந்த வீட்டு வேலையை முடிந்தாள்.
இரவுக்கு தோசை ஊற்றி அனைவரும் சாப்பிட்டு முடிந்து, கணவனும் வேலைக்குச் சென்றபிறகு, தியா குட்டி தூக்கத்தைத் தழுவும் நேரம் மீண்டும் அந்த அழுகுரல்.

சின்ன வயசில் அம்மாவோடு சேர்ந்து படித்த, கந்த சஷ்டி கவசம் மனசுக்குள் ஓட ஆரம்பித்தது. இத்தனை நாட்களாக தெரியாத தனிமையின் பயம் இன்று உடலெங்கும் ஆட்சி செய்தது. விறுவிறுவென சமையலறைக்குச் சென்று, விளக்கமாற்றை கையில் எடுத்துக் கொண்டு அவள் ஹாலுக்கு வரும் போதுதான், அந்த வெள்ளை ஜிப்பா அணிந்தவர் அழுது கலங்கிய முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார்.

‘ஏய், எப்படி வீட்டுக்குள்ள வந்த? திருடனா நீ?’ என்றபடியே கூச்சலிட்டு போலீசைக் கூப்பிட கைப்பேசியைத் தேடினாள்.

‘சுபிக்‌ஷா, கொஞ்சம் பொறு! உன்னை நான் எந்த விதத்திலும் துன்புறுத்தப்போவதில்லை` எதிரொலி போல ஒலித்தது அவரின் குரல்.

`என்னை எப்படித் தெரியும்? முதல்ல யார் நீ?` என்ன தான் கத்திப் பேசினாலும், இம்முறை ஒலியின் அளவு எதிராளியின் காதுக்கு எட்டும் தூரம் மட்டுமே பயணித்தது. எதுவும் பேசாமல், எதிரே இருந்த நாற்காலியில் அமரும்படி கை காட்டினார் அந்த வெள்ளை ஜிப்பா. மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல அமைதியாய் அமர்ந்தவள், அவரை தலை முதல் பாதம் வரை அளந்தாள். ‘இது பேய்தான், எதிர்த்த பிளாக்-ல ஒரு பெரியவரு கேன்சர் வந்து இறந்திட்டாருன்னு சொன்னாங்களே அவராய்தான் இருக்கணும். ஆனா எதுக்கு இங்க வந்தாரு?’ மனதுக்குள் புலம்பும் சமயம்,’நீ நினைக்கிற மாதிரி நான் பேய் இல்லை சுபி’ என்றதும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. `நீ… நீ…` வார்த்தைகள் கிடைக்காமல் நாக்கு நர்த்தனம் ஆடியது.

‘நானா…? ஆதியின் தொடக்கப்புள்ளி, இந்த பிரபஞ்சத்தை வடிவமைத்தவன், கால கோட்டினை கட்டுக்குள் வைத்திருப்பவன், ஆற்றலின் அமைப்பானவன், உன்னை விட உன்னை முழுதாய் அறிந்தவன், உனக்குப் புரியும்படிச் சொன்னால், கடவுள்!’ என்றபடி கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தார் அவர்.

‘வாட் த ப**** (சென்சார் வார்த்தை)’ என்று மனதுக்குள் திட்டினாலும், மனசாட்சி `கூல் சுபி, ஒன்னு குடிச்சிட்டு உளறுவான், இல்லை மனச் சிதைவு நோயாளியா இருக்கணும். அவசரப்பட்டு ஏதும் சொல்லாதே’ என்று எச்சரித்தது.

‘கமான் சுபிக்‌ஷா, மது தரும் போதையை விட, ஏகாந்த நிலையில் இருப்பவன் நான். மனங்களை கடந்த மனசாட்சியின் குரல் நான். கடவுள்ன்னு நிரூபிக்க நான் என்ன செய்யணும்னு சொல்லு?’ என்றார்.

‘274581 x 319567 = எவ்வளவு?’ என்றாள் சட்டென.

`ஹா ஹா ஹா.. சுபிக்‌ஷா… உன் டீச்சர் புத்தியைக் காட்ற பார்த்தியா? சரி… உன் பருவ வயதில் உன்னை முதன் முதலில் முத்தமிட்ட ஆண் யாரென்று சொல்லவா?` என்றதும் வேர்த்துக்கொட்டியது அவளுக்கு! இருப்பினும் முத்தம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆக அந்த மற்றோருவர் மூலமாக அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு என்பதால், எதுவும் பேசாமல் குழம்பிய நிலையில் இருந்தாள். ஒரு நிமிடம் ஆழ்ந்த மூச்செடுத்த அந்த வெள்ளை ஜிப்பா, `வேலைக்குப் போய் சம்பாதிக்கறதால, என்னால் இந்த சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள முடியும்ன்னு நினைச்சு விட்டிட்டுப் போறீங்களா அப்பா? உங்க கைகளால் தூக்கும் போது, கண்ணு விழிக்காமலே, உதடு சுழித்து சிரிப்பேன்னு சொல்லுவீங்களே, இன்னும் அதே பச்சைக் குழந்தைதான் நான். பயமா இருக்கு அப்பா! அம்மா இல்லாத என்னை நீங்களும் விட்டுப் போகாதீங்கப்பா` என்று ஒவ்வொரு வரிகளையும் நிறுத்தி நிதானமாக சொல்லும் போது, சுபியின் கண்களில் அருவியாய் நீர் கொட்டியது.

”உன் அப்பாவுக்கு கொள்ளி வைப்பதற்கு முன், அவர் காதுக்குள் ரகசியமாய் நீ சொன்னது எனக்கு எப்படித் தெரியும் சுபி?, இப்போதாவது நம்புகிறாயா நான்தான் கடவுள் என்று?“
வெள்ளை ஜிப்பா கேட்டதற்கு மெளனமாய் தலையாட்டியவள், அவரின் கழுத்தில் எந்த மத அடையாளம் தொங்குகிறது என்று தீவிரமாய் தேடினாள்.

‘மனுஷன் உருவாக்கியதுதான் மதம், நான் கடவுள் மட்டுமே!’ தெளிவுபடுத்தினார் கடவுள்.

‘ஸ்ஸப்பா, நிறைய தமிழ் சினிமால கேட்ட டயலாக், புதுசா எதாவது சொல்லு !’ அலுத்துக்கொண்டாள் அவள்.

அங்கு சில நிமிடங்கள், மெளனம் மட்டும் பேசிக்கொண்டிருந்தது.
சுபி எதோ சொல்ல உதடு பிரித்த நேரம், ‘இத்தனை நாள் இல்லாமல், இப்ப எதுக்கு என் வீட்டுக்கு வந்தாய்? இதுதானே நீ கேட்க நினைப்பது?’ என்றபடி புன்னகை பூத்தார் அவர்.

‘யோவ்… நீ கடவுள் தான், ஒத்துக்கறேன், அதுக்குன்னு நீ பாட்டுக்கு நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லிக்கிட்டே போற? கொஞ்சம் நிறுத்தறயா? நீ பண்ணின அலப்பறையில் தலை வெடிக்கிறது. இரு, ஒரு காப்பி போட்டு வர்றேன், குடிச்சிட்டே பேசலாம்’ என்றபடி சமையலறைக்குச் சென்றாள் சுபி.

காப்பிக்காக காத்திருக்கிறார் கடவுள் (இடைவேளை).

இந்தா, எடுத்துக்கோ என்றபடி ஒரு கோப்பையை கடவுளிடம் தந்துவிட்டு, எதிர்தரப்பு வழக்கறிஞர் போல வாதத்துக்கு தயாராக அமர்ந்த சுபிக்‌ஷா, அவர் ஒருவாய் காப்பி குடித்ததும்,
‘சரி, இப்ப சொல்லு. எதுக்கு என்னைப் பார்க்க வந்தாய்?’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

‘நீ ஒரு தப்பு பண்ணிவிட்டாய் சுபி’

கடவுள் சொன்னதும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இதுக்குத்தான் வந்தியா? நான் எத்தனையோ தப்பு பண்ணிருக்கேன். அதில் எதைச் சொல்றேன்னு தெரியலையே?“

“நீ பண்ணிய தப்புக்கு நான் தண்டனை தர வரலை. எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நியாயம் கேட்டு வந்திருக்கேன்“ நிதானமாய் வார்த்தைகளைக் கொட்டினார் கடவுள்.

சிரிப்பதை நிறுத்திவிட்டு, மிரண்ட விழிகளில் பார்த்தாள் அவள்.

“ஆமா சுபி, நான் போட்ட கணக்கை, நீ தவறாக்கிவிட்டாய். இந்த பூமியில், எனக்குத் தெரியாமல் நடப்பது ஏதும் இல்லை. ஆக்கமும் நானே, அழிப்பும் நானே, ஆனால் என்னை மீறியும் சில சமயம் பிழைகள் நடப்பதுண்டு” என்று கடவுள் சொல்லும் போது, அவள் கைகள் தானாக வயிற்றை தடவிக் குடுத்தது.

“சில நோக்கங்களுக்காக, விதியை வெல்லும் மதியுடைய சில உயிர்களைப் படைப்பேன். என் தனிப்பட்ட குறிப்பேட்டில் அவர்கள் பற்றிய விபரங்கள் இருக்கும். அந்த உயிர்களை அடிக்கடி கண்காணிப்பேன். அதில் ஒன்றுதான் அங்கே வந்தது“ என சுபிக்‌ஷாவின் வயிற்றை சுட்டிக்காட்டியவர் “அப்படி நான் அனுப்பிய ஒரு ஜீவனை, நீ இந்த பூமியைத் தொடமுடியாமல் கருவிலேயே கருக்கிவிட்டாய். என் எதிர்பார்ப்பை..“ என கடவுள் பேசி முடிப்பதற்குள், “ஏய், உன் பிரச்சனைதான் என்ன? ஆமா, நாலு நாளைக்கு முன்னாடி அபார்ஷன் பண்ணிக்கிட்டேன், 2 மாசக் கரு! இப்ப என்ன அதுக்கு? “ வெறுப்பை உமிழ்ந்தாள் சுபி.

“அந்த ஜீவனை நான் உன் வழியாக இந்த பூமிக்குக் கொடுத்தேன். அதற்கென சில கடமைகளை தர திட்டமிட்டேன்“ வேதனைப்பட்டார் கடவுள்.

“போடாங்… ஏதோ என்னைவிட உனக்குத்தான் என்னை நல்லா தெரியும்ன்னு வசனம் பேசினாய், முதல் பிரசவத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியும்தானே? தாய்க்கு ரத்த அழுத்தம் குறைவா இருக்கு, இரு உயிரில் ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும்ன்னு டாக்டர் சொன்னது உனக்கும் கேட்டிருக்குமே?! யார் உதவியும் இல்லாமல் குழந்தையை வளர்க்க கஷ்டப்பட்டு, போஸ்ட்நேடல் டிப்ரசனில் (இளம் தாய்மார்களுக்கான மன உளைச்சல்) சிக்கி, நான் பட்ட பாடெல்லாம் சொல்லி மாளாது. மறுபடியும் அந்த வலியைத் தாங்க மனரீதியா நான் தயாராக இல்லை. குடும்ப சூழலை முன் வைத்து, இப்போதைக்கு இரண்டாவது குழந்தை வேண்டாம்ன்னு நானும் என் கணவரும் முடிவு செய்தோம். இதுல நீ யாரு கேள்வி கேட்க?“ கொட்டித் தீர்த்தாள் சுபி.

“இருந்தாலும் நான் தந்த உயிர்“ என இழுத்தார் கடவுள்.

“யோவ்… லூசு… எதாவது அசிங்கமா கெட்ட வார்த்தையில் திட்டிடப் போறேன். நான் தந்தேன், நான் தந்தேன்னு ஏலம் விடறியே? முதல்ல யாருக்கு என்ன தரணும்னு தெரியாத கூறுகெட்ட கடவுள் நீ. இதே பூமியில் குழந்தை இல்லாதவங்க படற அவமானமும் வேதனையும் தெரியுமா உனக்கு? என் கூட வேலைப் பார்க்கிற உமா டீச்சருக்கு கல்யாணம் ஆகி 12 வருசம் ஆகுது. பார்க்காத டாக்டர் இல்ல, போகாத கோயில் இல்ல, பிள்ளை இல்லாத வருத்தத்தில் 2 தடவை தற்கொலை முயற்சிப் பண்ணிட்டாங்க. எங்க பெரியம்மா 62 வயசில் சாகும் போதும் குழந்தையில்லாத ஏக்கத்திலேயே செத்தாங்க. குடுக்கணும்னு நினைக்கிற நீ, அவங்களுக்குள்ள உயிரை கொடுக்கலாமே? என் நிலை உனக்கு தெரியுமே? நான் என்ன செய்வேன் என்றும் தெரியுமே? அப்புறம் என்ன மயிறுக்கு என்கிட்ட குடுத்த?“

“அது, பிரபஞ்சத்தின் பதிவேட்டில் நீ சொன்ன இருவருக்கும் கர்ப்ப பை திறக்க குறிப்பிடப்படவில்லை“ என்று சமாளித்தார் கடவுள். “டேய்.. (வாயை மூடு என்று சைகை செய்தவள்) என் ஆத்திரத்தைக் கிளப்பாதே, எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டிருந்தால், அதன்படிதான் நடக்குமென்றால், நீ என்ன இதுக்கு கடவுள்-ங்கிற பேரில் உட்கார்ந்திருக்கிற? கிளம்பு கிளம்பு. நாங்களே எங்க பொழப்பை பார்த்துக்கிறோம்.“

அசையாமல் அமர்ந்திருந்த கடவுளின் முகத்தில், இன்னும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற சோகம் தெரிந்தது.

“ நீ முதல்ல யோக்கியமா? உனக்கு ஒரு வேலை ஒழுங்கமா செய்யத் தெரியுதா? என்னதான் நான் பெத்து வளர்த்த குழந்தையா இருந்தாலும், தியா குட்டியை ரொம்ப நேரம் கையில் வைச்சிருந்தால் மரத்துப் போன மாதிரி வலிக்கும். எதிர்த்த பிளாட் சித்ராக்கா, செரிப்ரல் பல்சி (மூளை முடக்குவாதம்) வந்த 15 வயதான மகனை இன்னும் குழந்தையாக இடுப்பில் தூக்கிட்டு திரியறாங்க. அதுவும் உன் உருவாக்கம் தானே? ஏன் அந்த பையன் மேல உன் எதிர்பார்ப்பை வைச்சு, நல்லவிதமா படைச்சிருக்கக்கூடாது? எங்கப்பத்தா சொல்லிருக்கு. கேக்கறவன் கேனையனா இருந்தா, எலி கூட ஹெலிகாப்டர் ஓட்டும்னு நம்ப வைக்க முடியுமாம். அதுமாதிரி இருக்கு நீ பேசறது. குழந்தை வேணும்னு கதறவங்களுக்கு வரம் தர வக்கில்லாத உனக்கு, நான் கருக்கலைப்பு செஞ்சதை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. நான் செஞ்சது பாவம்னா நீ செய்றது உலக மகா அயோக்கியத்தனம்“.

தான் தவறிழைத்தது தெரிந்தாலும், அதை ஒத்துக்கொள்ளவில்லை அவர். அது கடவுள் என்பதற்காக அல்ல. அது ஆண் ஆதிக்கத்தின் இயல்புகளில் ஒன்று, “என் வீட்டுக்கு வந்து அழறியே, உன்னைத் தேடி கண்ணீர் வடிக்கிறவங்க குரலை என்றாவது கேட்டிருக்கிறாயா? இனியாவது உருப்படியா உன் வேலையைப் பார்க்க முடிஞ்சால் பாரு. இல்லையா, விதியிடம் ராஜினாமா கடிதம் எழுதித் தந்திட்டு கிளம்பு. நாங்களாச்சு விதியாச்சு, ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்த்துக்கிறோம். நீ இடையில் புரோக்கர் வேலை செய்ய வேண்டாம்“ சுபி சொல்லி முடிக்கும் போது கையறு நிலையில் இருந்தார் கடவுள்.

கோபம் தணிந்தவளாய் “எங்க ஊரு அரசியல்வாதிங்க மாதிரி, உண்மையைப் பேசறவங்களை, கடவுள் மறுப்பாளன்னு குறை சொல்லாமல், என் பக்க நியாயத்தை யோசிச்சுப் பாரு. உன் மேல மரியாதை இருக்கு. அதுக்காக நீ செய்ற எல்லாத்துக்கும் ஆமாஞ்சாமி போட முடியாது“ என்றாள் சுபி. இப்போது கடவுள் கலங்கவில்லை. குற்றவாளிக் கூண்டில் இருப்பது நிரபராதி என்பதை உணர்ந்தபடி காபியைக் குடித்து முடித்தார்.

“உன் புத்தி சொல்வதைக் கேட்கிறாய், நீ எந்த சூழலையும் சமாளிப்பாய்“ என சுபியை பாராட்டிவிட்டு விடைபெற்றவர், தன் நாட்குறிப்பேட்டில் ‘இன்று நான் மீண்டும் கடவுளான நாள்` என்று பதிவு செய்தார்.

அந்த காபிக் கோப்பையில் மிச்சமிருந்த துளிகளில் கடவுளின் முகமூடி இல்லாத முகம் தெரிந்தது.

டிஸ்கி: கதையில் வரும் வசனங்கள் யாவும், முழுக்க முழுக்க என் சொந்த கற்பனையே தவிர, என் சொந்த கருத்து அல்ல.

• பிரேமா மகள்

Related posts

கடவுள் இருக்கான் குமாரு : பிரேமா மகள்

பிரேமா மகள்

கன்னிகழியாச் சாமி

வளவ. துரையன்

1 comment

Jayasri May 23, 2021 at 9:44 am

Excellent narration!

Reply

Leave a Comment