8 C
France
March 29, 2024
corona-cat
இலக்கியம்பதிவுகள்

கொரோனா பூனை !

வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை. முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவது போல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது. தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப் பிம்பங்களில் அலுப்புற்றிருந்த விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின. இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்கக்கூடிய அமைதி. மனிதர் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இயற்கை.

கடந்த இரண்டு நாட்களாக மழை… மழை… இன்று தான் சூரியனைக் காண முடிந்தது. உடுத்திய சாம்பல் நிற மேகத்தை களைந்திருக்கும் நீல வண்ண ஆகாயம்; வேலிக்காக வளர்த்திருந்த செடிகளும், மரங்களும் மாசற்று பளிச்சென்று இருக்க, கைகள் நீளுமானால் கிள்ளித் தின்னலாம் அப்படியொரு பச்சை. குடியிருப்புகளின் சுவர்கள் கூரைகள் கூட மழை நீரில் அலசப்பட்டு பளிச்சென்று இருந்தன. புற்பூண்டுகளும், செடிகொடிகளும், பூச்சிகள், புழுக்களுக்கு இசைந்து நெளிகின்றன. இலைகள் குலுங்குவது போல அசைய, காற்றுக் கேசத்தை கலைத்துவிட்டு ஊமையாக கடந்துபோனது. மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படாத தொழுவ மாடுகள் போல சோர்வுடன் வீதியோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள். மரங்கள் உயிர்ப்புடன் நின்றவண்ணம் புரள் போவது போல பிரமை. மொசுமொசுவென்று என் கால்களில் ஏதோ உரசியது, பதற்றதுடன் குனிந்தேன் : மியாவ் என்று குரலெழுப்பி விண்ணப்பிக்கும் கண்களுடன் ஒரு பூனை. கறுப்பு நிறப் பூனை, ஏற்கனவே அதன் உரிமையாளருடன் பலமுறைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.

பிராணியின் ஆரோக்கியத்தை, உடல் ரோமங்களின் மினுமினுப்பு உறுதி செய்தது. கரும்பழுப்புக் கண்களில் பளபளப்பு. அருகம் புல் போல பக்கத்திற்கு நான்காக விறைத்திருந்த மீசை மயிரில் கூட வளப்பம் மின்னியது. அதன் மெல்லிய இலை போன்ற சிவந்த நா, எந்திரத்தனமாக விநாடிக்கொரு முறை, வெளிப்படுவதும் உதடற்ற வாயை ஈரப்படுத்திய பின் தன் இருப்பிடம் திரும்புவதுமாக இருக்க சில கணம் இரசித்தேன். பூனையின் கண்களை இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன், வெறுமையும் கெஞ்சலும் அப்பி இருக்கின்றன. இருந்தும், எனது கால்களைத் தனது முகத்தால் உரசியபின், தம் முன்னிரண்டு கால்களைக் கொண்டு தெரிவித்த செய்தியை விளங்கிக்கொள்ள பொறுமை இல்லை. நான் வெளியிற் செல்வதற்கு, என் கைவசமிருந்த படிவம் அனுமதித்த நேரத்தில், பத்து நிமிடங்கள் ஏற்கனவே செலவாகிவிட்டன என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம், பூனை  அண்டை வீட்டுக்காரிக்குச் சொந்தமானது. பூனையை அலட்சியம் செய்துவிட்டு விடுவிடுவென்று சாலையில் நடக்கத் தொடங்கினேன்.

கடந்த பத்து தினங்களாகவே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் இரு எண்ணிக்கையுமே மளமளவென்று அதிகரிக்க எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் நடைமுறை வாழ்க்கையை, முற்றாக அரசாங்கம் முடக்கிவிட்டது. உரிய காரணங்களின்றி வெளியிற் செல்ல அனுமதி இல்லை. அவசியம் இருப்பின் முகவரியுடன் கூடிய படிவத்தை நிரப்பி அதில் நாள், வெளியிற் செல்லத் தொடங்கும் நேரம், அதற்கான காரணம் மூன்றையும் குறிப்பிடவேண்டும். இன்றைக்குப் பேரங்காடிக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கவேண்டிய நெருக்கடி. அதற்காக வெளியில் வந்தபோதுதான் கதவருகில் அண்டைவீட்டுப் பெண்மணியின் பூனை தரிசனம்.

இந்தியப் பிறப்பும் வளர்ப்பும் சோற்றைத் தின்று பசியாறும் வழக்கத்திலிருந்து என்னை விடுவிக்காததைப் போலவே சில பண்பாடுகளிடமிருந்தும் என்னை விடுவிக்காமல் சிறை வைத்திருக்கிறது. தந்தையை, வயதில் மூத்தவரை, நண்பர்களைக் கூட ஒருமையில் அழைப்பது நம்முடைய வழக்கமில்லை, ஐரோப்பியருக்கு அது சரி. அது போலத்தான் எனது அண்டை வீட்டுக்காரியுடனான எனது இன்னொரு பிரச்சனையும். பெண்மணியின் குடியிருப்புக்கு அருகில் எனது மனைவி பிள்ளைகளுடன் வசிக்க நேர்ந்தபோது எனக்கு வயது 30. இன்று ஐம்பத்திரண்டு. எப்போது முதன் முதலாக இருவரும் ஒருவரை மற்றவர் கடந்து செல்ல நேர்ந்திருக்கும் என்பது நினைவிலில்லை. ஆனால் இந்த இருபத்திரண்டு வருடங்களில் பல முறை எங்கள் இருவருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஐரோப்பியர் வழக்கப்படி அப்பெண்மணி ஒவ்வொரு முறையும் எனக்குப் பிரெஞ்சு மொழியில் ‘வணக்கம்’ என்ற பொருளில் ‘போன் ழூர்’ என்பாள். முதலில் கூறுவது அவளாகவே இருக்கும். இருந்துவிட்டு போகட்டும், அதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனைகள் எதுவும் அவள் தரப்பில் இல்லை, மாறாக எனது தரப்பில் நிறைய இருந்தன.

இந்தியப் பண்பாட்டில் அண்டை வீட்டுக்காரன் எதிர்ப்படும் போதெல்லாம் வணக்கம் தெரிவிக்கப் பழகியதில்லை. அதிலும் பெண்கள் என்றால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பது விதி. இத்தொட்டிற் பழக்கம் ஐரோப்பா வரை என்னைத் தொடர்கிறது. நான் அவளுக்கு முதலில் « போன் ழூர் » தெரிவிப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் ஐரோப்பியர் நாகரீகத்தை மதித்து அவளுக்கு பதிலுக்குக் குறைந்தபட்சம் ஒரு புன்னகையையேனும் தெரிவிக்கவேண்டும். ஆனால் அது கூட எனது மனநிலையை பொறுத்திருந்தது. உதாரணத்திற்கு அப்பெண்மணி 100 முறை எனக்கு முகமன் கூறியிருப்பதாக வைத்துக்கொண்டால், நான்கைந்து முறை மரியாதை நிமித்தம், பதில் வணக்கம் தெரிவித்திருப்பேன். 95 முறை தெரிவிக்காததற்கு, அப்போது வேறுமன நிலையில் இருந்திருப்பேன் அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்திருப்பேன்.

ஓருண்மையைச் சொல்லவேண்டும். இவ்வுலகில் ஒரு சிலர் நிலத்தில் வாழ்வதில்லை, நீரில் வாழ்கிறார்கள். நீரெனில் ஆழ்கடலில். மூச்சுத் திணறும்போது நீரின் மேற்பரப்பிற்கு வருவதுண்டு. நுரையீரலை ஆக்ஸிஜனால் நிரப்பிய திருப்தியில் மீண்டும் ஆழ்கடல் மனிதர்களாகிவிடுவர். அவர்களில் ஒருவர் நீங்களா என்றெனக்குத் தெரியாது. ஆனால் நான், அவர்களில் ஒருவன். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்றிக் கொண்டிருப்பவன். எனக்கும் அடுத்த மனிதருக்கும் இடையே சமூக இடைவெளி என்பது கைபட்டுவிடும், தும்மல் தொட்டுவிடும் தூரம் என்றில்லை, மரியாதை நிமித்தமாக எதிர்ப்படும் மனிதரின் புன்னகை கூட எனக்குத் தீங்காக முடியலாம் எனத் தள்ளி நிற்பேன், முகத்தைத் திருப்பிக்கொள்வேன். இந்த லட்சணத்தில் அண்டை வீட்டுப் பெண்மணியின் « போன் ழூர் » கடனைத் தீர்க்க வேண்டுமென்பது தலையெழுத்தா என்ன?

பெண்மணியின் குடியிருப்பு இரண்டு நாட்களுக்கு முன்பும் பூட்டியிருந்தது. அப்போது அதை நான் பொருட்படுத்தவில்லை. இன்றைக்கும் பூட்டி இருக்கிறது. அவளுடைய பெழோ 305 நிறுத்தபட்ட இடத்தில் தொடர்ந்து அசையாமலிருந்தது. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கோடை நாட்களில் பூட்டப்பட்டிருந்தால், நீண்ட நாள் விடுமுறையைக் கழிக்க பயணம் செய்திருப்பாள் என்பது நிச்சயம். தவிர, அவ்வாறு பயணிக்கிற போதெல்லாம் தம்முடைய செல்லப் பிராணியை பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தினரிடம் ஒப்படைப்பது பெண்மணியின் வழக்கம். அவர்கள் பூனையைக் கொண்டு செல்வதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமல்ல. கடந்த பதினைந்து நாட்களாக கொரோனா வைரஸ் பிரச்சனையால் போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டன. உள்ளூரிலே கூட வீட்டை விட்டு மனிதர்கள் வெளியில் போவதென்றால் அனுமதி வேண்டும். ஆக, பெண்மணியின் குடியிருப்புத் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதற்கு ஒருவேளை கொரோனா வைரஸ்? காலைச் சுற்றிய பூனையின் கண்கள் முதன் முறையாக மனதைச் சங்கடப்படுத்தியது.

வீட்டுக்கென சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைத் தேடித் தேடி வாங்கியபோது, பூனைக்கென்று டின்னில் அடைத்த உணவுப்பெட்டிகள் இரண்டையும் மறக்காமல் வாங்கிக்கொண்டேன். வீட்டிற்குத் திரும்பியபோது கதவருகே பூனை இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை. அழைப்பு மணியை அழுத்தினேன். மனைவி கதவைத் திறந்தாள். உதட்டில் விரலை வைத்து ‘அமைதி’ என்றாள். அவள் விலகிக்கொண்டதும் இரண்டடி  தூரத்தில் பூனை ஆர்வத்துடன் பாலை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது. என் புருவங்கள் உயர்ந்ததை விளங்கிக்கொண்டவள் போல « பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனதை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். அவர்கள் பூனை எப்படியோ தப்பி வெளியில் வந்திருக்கிறது. நல்ல பசி போல. பாலை ஊற்றி வைத்தேன். முதலில் தயங்கியது. வாயை வைக்கலை. இப்போதுதான் குடிக்க ஆரம்பித்தது » மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாள்.

அவள் கண்களில் தெரிந்த இரக்கம் எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. பூனையிடம் வைரஸ் இருந்தால்? பிராணி நலக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவிப்பது நல்லதென்றேன். அவள் சங்கடத்துடன் தலையாட்டினாள். பாலைக் குடித்துக்கொண்டிருந்த பிராணியை நெருங்கி, உடலை இரண்டாக மடித்து, அதன் காதில் மெதுவாக « போன் ழூர் » என்றேன். அதிர்ச்சியில் தலையை உயர்த்திய பூனை சில நொடிகள் என்னை ஏறிட்டுப் பார்த்தது. பிறகு எனது மனைவி முகத்தில் சில நொடிகள் அச்சம் நீக்கியதைப் போல தொடர்ந்து பாலைக் குடித்தது.

– நாகரத்தினம் கிருஷ்ணா

Related posts

கன்னிகழியாச் சாமி

வளவ. துரையன்

Strasbourg – பிரெஞ்சு தேசத்திற்குள் ஒரு ஜெர்மன் பகுதி

Editorial

பிரான்சு: நிஜமும் நிழலும் !

Editorial

கல்விச் சீர்திருத்தம் கண்ட அன்னை சாவித்திரிபாய் ஃபுலே.

Editorial

பிரெஞ்சு தேசிய நாள், ஜூலை 14 : வரலாறும் நிகழ்வும்

Editorial

மூப்பறியா மூதுரை மூதாட்டி: “ஔவை” !

Editorial

Leave a Comment