9.4 C
France
May 20, 2024
செய்திகள்

கட்டாய தடுப்பூசி, சுகாதார பணியாளர்களுக்கு முக்கிய விதிகள், பொது இடங்களில் உலவ கட்டாய சுகாதார அட்டை : புது கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரான்சு

பிரான்சில் டெல்டா வகை கோவிட் தொற்று ஊடுருவியிருக்கும் நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். நாட்டில் கோவிட் -19 டெல்டா வகை தொற்றின் பரவலை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை பற்றியும், கட்டாயமாக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் பற்றியும் விளக்கினார்

பிரான்ஸ் மற்றும் அதன் கடல்கடந்த நிர்வாக பகுதிகளில் புதிதாக பரவத்துவங்கியிருக்கும் கோவிட்-19 டெல்டா வகை நோய்த்தோற்று குறித்து பேசிய அவர், உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அனைத்து பிரெஞ்சு குடிமக்களையும் வலியுறுத்தினார்.

“நாம் இன்று செயல்படவில்லையென்றால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். நாடு முழுவதும் 100 சதவீத தடுப்பூசி விகிதத்தை அடைய அரசாங்கம் முயற்சிக்கிறது” என்றும் மக்ரோன் விளக்கினார்.

அதோடு,
‘’அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும். செப்டம்பர் 15-க்குள் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் அபராதம் உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். தடுப்பூசி என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பு, ஆனால் அது நமது தனிச்சுதந்திரமும் கூட” என்றும் கூறினார்.

‘தடுப்பூசி போடாத சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது, அதோடு, செப்டம்பர் 15-க்கு பிறகு வேலை செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று பிரான்சின் சுகாதார மந்திரி ஆலிவர் வூரன் தெரிவித்துள்ளார்.

‘விடுமுறைக்கு பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் துவக்கப்படும்’ என்றும் அவர் அறிவித்தார்.

மற்ற நடவடிக்கைகள் குறித்து பேசும்போது ‘பிரெஞ்சு நிர்வாக பிரதேசங்களான மர்த்தினிக் மற்றும் ரீயூனியன் தீவில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்துள்ளார்.

கோடைகாலம் முடிந்து வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் இருந்து, மருத்துவர் அளிக்கும் மருந்து சீட்டு இல்லாவிட்டால் பி.சி.ஆர் பரிசோதனைகள் இலவசமாக கிடைக்காது என்று கூறிய மக்ரோன், கோவிட் -19 நோய்தொற்றினை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்வதை விட தடுப்பூசி போட மக்களை ஊக்குவிப்பதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

“இந்த கோடைக்காலம் பொருளாதார மீட்சிக்கான கோடைகாலமாக இருக்கும்,” என்று கூறிய அவர், வரும் ஆகஸ்ட் முதல் பிரான்சில் உள்ள பார்கள் (மதுவகங்கள்), உணவகங்கள், கஃபேக்கள் (குளம்பியகங்கள்) மற்றும் வணிக மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் நுழைவதற்கு கட்டாயமாக்கப்படும் என்றார். இந்த கோவிட் ஹெல்த் பாஸ்போர்ட் (சுகாதார அனுமதி அட்டை), ஒரு நபருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று அல்லது அண்மையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டிருக்கும்.

அதாவது,கொரொனா பரிசோதனைகளில் தோற்று இல்லை எனும் சோதனை முடிவு அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர் எனும் சான்றிதழ் அல்லது அண்மையில் கோவிட் -19 இலிருந்து மீண்டதற்கான சோதனை முடிவு என இவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடும்.

இவற்றின் மூலம் டெல்டா வகை கொரோனா நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த சில கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு கொண்டுவந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த உரைக்கு பின்னர் பலர் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை செய்ய முயன்றதால் பிரான்சின் இணைய சுகாதார வலைதளமான Doctolib.Fr செயலிழந்தது.

பிரான்சில் ஜூலை 12, திங்கள் கிழமை அன்று 1,260 புதிய கொரோனா நோய்தொற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பிரான்சில், மே மாத இறுதியில், சுமார் 40 சதவீத மக்கள் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர், 53.1 சதவீதம் பேர் முதல் தவணைக்கான தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

நோய் தொற்றின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிப்பதைத் தடுக்க பிரான்சும் பிற ஐரோப்பிய நாடுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிக்கொண்டிருக்கும்போது, இங்கிலாந்து நாடு ஜூலை 19 ‘சுதந்திர நாளை’ முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது, அப்போது தொற்றுநோய் தொடர்பான பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

Author

Related posts

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது பொங்கல் விழா!

Editorial

பிரான்சில் பத்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்த பொருளாதார இழப்பு விகிதம் !

Editorial

பிரான்ஸ் AIA தமிழ் அமைப்பின் தீபாவளி கொண்டாட்டம்!

Editorial

பிரான்சு தமிழ் சங்க துணைத் தலைவருக்கு தமிழக அரசின் இலக்கிய விருது !

Editorial

பிரான்சு நகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் !

Editorial

இந்தியா முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு : விரிவான தகவல்கள்

editor

Leave a Comment