3.2 C
France
April 20, 2024
பதிவுகள்

என் சமையலறையிலிருந்து…..

மதிய உணவுக்கு, உப்புமா செய்து தந்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்தவள் நான். என் அம்மா ஆசிரியராக பணிபுரிந்ததால், ஸ்கூல், டியூசன் கிளாஸ் முடிந்து இரவு உணவு சமைக்க ஆரம்பிக்கும்போதே மணி எட்டாகியிருக்கும். பசிக்கும்போது, தட்டிலிருப்பதை குறைசொல்லாமல் சாப்பிடவேண்டும் என்று சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருந்தோம்.

அப்படியிருந்த எனக்கு திருமணமாகி, மாமியார் வீட்டிற்குச் சென்ற பிறகு, ஏதோ ஏலியன்கள் தேசத்திற்கு வந்துவிட்டோமா என எண்ண வைத்தது அங்கிருந்த `சமையலறை`.

கடற்கரையோர கிராமம் ஒன்றில் வசிப்பதால், மீன், இறால், நண்டு என கடலுணவுகள் வாரத்தில் ஏழு நாளும் சமையலில் இருக்கும். காலை உணவே பெரும்பாலும் அசைவத்துடன் தான் துவங்கும். மதியம், குழம்பு, கூட்டு, வறுவல், சம்பல் என குறைந்தபட்சம் 4 வகை கறிகளாவது மதிய உணவிற்கு இருக்கும்.  (விசேச நாட்களில் அது இருமடங்காகும்) இரவுக்கு புட்டு, இடியாப்பம், தோசை  இப்படியான சிற்றுண்டிகளும் அதுக்கு பக்கவாத்தியமாக சட்னி சாம்பார் வகையறா.

முதலில் திருமணத்திற்காக வந்திருக்கும் உறவினர்களுக்காக `விருந்து சமையல்` என்று நினைத்தேன். நாட்கள் போகபோகத்தான் அவர்களது தினசரி உணவுமுறையே இப்படித்தான் என்னும் போது, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இப்படியே சமைத்துக்கொண்டிருந்தால் நான் எப்போது அலுவகம் செல்வது?

புதுபெண்ணுக்கு அட்வைஸ் பண்ணுவதற்காகவே, சொந்தபந்தத்தில் நாலு பேர் இருப்பார்களே, அந்த குடும்பஸ்திரிகள் எனக்கு தவறாது சொன்ன விசயம், `உன் புருஷன் மனசில் இடம் பிடிக்க ஒரே வழி, அவன் வயிற்றுக்கு  ருசியா சமைச்சுப் போடு. புருஷன் அடிச்சாலும் கோபத்தை சாப்பாட்டில் காட்டாமல், வகைவகையா செய்து வைக்கனும். சாப்பிடும் போது, கூடவே நின்று பரிமாறணும். அதைவிட முக்கியம், என்ன தான் பசிச்சாலும், புருஷன் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடணும்`. இப்படியாக அவர்கள் தந்த எச்சச்ச கச்சச்ச அறிவுரைகளை அலசி ஆராய்ந்து காய போடுவதற்குள்,  தானே பாலையும் போட்டு ஹார்டிக் சிகஸர் அடித்தார் என் மூத்த நாத்தனார்.

அதாவது, புருஷன் வரும் நேரம் அறிந்து வாசலையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமாம். கேட்டின் அருகே பைக் சத்தம் கேட்ட அடுத்த நொடி, அடுப்பில் உலை வைத்து அரிசியைப் போட வேண்டும். அவர் வீட்டிற்குள் வந்து முகம் கழுவி. உடை மாற்றி வருவதற்கும் சோறு பொங்குவதற்கும் சரியாக இருக்கும். (நோட் த பாயிண்ட், குக்கரில் அல்ல, பாட்டிகால முறைப்படி பாத்திரத்தில் சோறு சமைக்கணும்). அப்படி சூடான சாப்பாட்டைத் தான் அவங்க வூட்டுக்காரர் சாப்பிடுவாராம், கொஞ்சம் சூடு குறைந்தாலும் மறுபடியும் சோறு பொங்கவேண்டுமே தவிர, ஏற்கனவே சமைத்த சாப்பாட்டை சூடுசெய்து தரக்கூடாது. அவருக்கு புடிக்காதாம். அப்படி புருஷன் மனமறிந்து சோறு பறிமாறாத பெண்ணுக்கு நரகத்தில்தான் இடம் கிடைக்குமாம்.

பெருமை பொங்க இதை என் நாத்தனார் சொல்லிவிட்டு `நீயும் இதே மாதிரி என் தம்பிக்கு சுடுசோறு ஆக்கிப்போட்டு அவனை நல்லா பார்த்துக்கோ` என்னும்போது, `யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்`ன்னு சாபம் குடுக்கற மாதிரியே மனசுக்குள் தோன்றியது.

பசிக்கும் ஒரு ஜீவனுக்கு, நாக்குக்கு ருசியாய் சமைக்க எனக்குத் தெரியும். ஆனால் பொழுதுபோக்கிற்காவும், வெட்டிப் பெருமைக்காகவும் தினம் தினம் வகைவகையாய் சமைக்கும் கலையை நான் அறிந்துகொள்ளவில்லை. புகுந்த வீட்டில் முதல் சில வாரங்கள் ரோலர்கோஸ்டரில் பயணித்தது போலவே இப்போதும் தோன்றுகிறது எனக்கு.

காலை, மதியம், மாலை டீ, இரவு என நாள் முழுக்க கிச்சனிலேயே இருக்கவேண்டியிருக்கும். எப்போதேனும் ஹாலில் ஓய்வாக அமர்ந்திருந்தாலும், கைகள் கீரையை ஆய்ந்துகொண்டோ, சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டோ தான் இருக்கும்.

நல்லவேளை, முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருப்பேன் போல. திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலேயே  எங்கள் வேலை காரணமாக வேறு ஊருக்கு தனிக்குடித்தனம் வந்துவிட்டோம். இருந்தாலும் விடாது கறுப்பு போல, கணவரின் நாக்கு மட்டும் கொஞ்சம் கூட தன்னை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே இருந்தது.  27 வருடங்களாக வக்கனையாக தின்று வளர்ந்த பழக்கம் அல்லவா? மாற்றுவது ரொம்பவே கடினமாக இருந்தது.

ஆரம்பத்தில் எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்த ஒரு விசயம், தினமும் அசைவம் சமைப்பது. சிக்கன், மீன் என மாறி மாறி சமைத்ததில், காய்கறிகளின் சுவையே மறந்துபோய்விடுமோ என்று பயந்துவிட்டேன். வெள்ளிக்கிழமை ஒருநாள் சைவம் சாப்பிடுவதற்கே மூக்கால் அழுவார் என்னவர். 3 வகை கறிகள் செய்து கூடவே வடையும் செய்து வைத்தால்தான் கொஞ்சமாவது வயிற்றுக்குள் இறங்கும்.

சமையல் பிளஸ் வீட்டுவேலைகளை சமாளிக்கவே `பகுதிநேர` வேலைக்கு மாறிக்கொண்டேன். அதுவே என் மாமியாருக்குப் பிடிக்கவில்லை. சமைத்து வைத்தாலும், மகனுக்கு நேரத்துக்கு நான் பரிமாறாமல் வேலைக்குப் போகிறேன் என்ற பெயரில் ஊர்சுற்றுகிறேன் என்று வருத்தப்பட்டார்.

நாத்தனாரும் மாமியாரும் போன் பண்ணும்போதெல்லாம் , முதலில் கேட்கும் கேள்வி, `இன்னிக்கு என்ன சமையல்?` என்பதுதான். ஏன் வேற எதுவும் சமைக்க மாட்டியா? என் பையனுக்கு இது பிடிக்காது, அவன் தலையெழுத்து நல்ல சோறு இல்லாமல் கஷ்டப்படுறான் போன்ற குத்தல் பேச்சுகள் இல்லாமல் ஒருபோதும் போன் வைக்க மாட்டார்கள்.

சமைக்கிற பெண்களில் முக்கால்வாசிப்பேர், செய்யும் வேலைக்காக அதிகம் மெனக்கெடுவதில்லை. அதற்கான திட்டமிடலே அவர்களைப் பாடாய்படுத்தி வைக்கும். சாம்பார் வைத்தால், அதற்கு தொட்டுக்கொள்ள காரசாரமாய் பொரியலோ வறுவலோ இருக்கவேண்டும். புளிக்குழம்பு வைக்கும் போது அதன் தொடுகறி புளிப்பு சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது. இப்படி மெயின் டிஷ்-யும் சைட் டிஷ்-யும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாததாக இருக்கவேண்டும் அதே நேரம் இரண்டும் ஒத்துப்போக்கூடியதாக இருக்க வேண்டும்.

என்னதான் குடும்பத்தினர் ரசித்து பாராட்டியிருந்தாலும், முந்தாநாள் சமைத்ததையே இன்று சமைக்கக்கூடாது. அதே போல அடிக்கடி ஒரே ரெசிப்பியும் இருக்கக்கூடாது. போன வாரம் சிக்கன் குருமா செய்தால், இந்த வாரம் சிக்கன் பெப்பர் மசாலா செய்ய வேண்டும்.

இதெல்லாம் விட ஒரு ஆப்பு இருக்கிறது, அது டாப்பு டக்கர் ஆப்பு. எல்லா குடும்பத்திலும் ஒரு அலர்ஜி பார்ட்டி இருக்கும். அது குடும்பத்தில் அளவைப் பொறுத்து ஒன்றோ ரெண்டோ, நமக்கென்று வந்து மாட்டும். அதாவது எல்லாரும் கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டால் அந்த ஜீவனுக்கு மட்டும் அந்த காய் ஒத்துக்காது. அந்த நபருக்காக வேறு குழம்பு வைக்க வேண்டும். இப்படியாக புரோக்கலி பிடிக்காது, பாவக்காய் இனிக்காது, முள்ளங்கி முத்தியது என பெரிய லிஸ்ட் போட்டு ஒதுக்கி வைப்பார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு வகையை சமைக்க, ஆனானப்பட்ட நள மகாராஜாவால் கூட முடியாது.

அதுவும் அந்த வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்துவிட்டால் போதும், கடவுளே நினைத்தாலும் அந்த தாயை காப்பாற்ற முடியாது. ஒரு உதாரணம் சொல்லட்டா ?! ஒருமுறை சிக்கன் பிரியாணி, கிரில் சிக்கன், தயிர் பச்சடி, முட்டை அனைத்தும் லஞ்சுக்கு சமைத்திருந்தேன். ஆனால் என் மகளோ எனக்கு இதெல்லாம் வேண்டாம், சப்பாத்தி வேண்டுமென்று அடம்பிடித்து அழுதாள். கணவரும் பாவம் குழந்தை , செஞ்சு குடு என்று அவளுக்கு சப்போர்ட் வேறு. காலையிலும் சரியாக சாப்பிடவில்லை. அய்யோ பாவமே என்று வேறு வழியின்றி மறுபடியும் சப்பாத்தி செய்தேன்.  இரண்டு மணி நேரம் கிச்சனில் பழியாய் கிடந்து சமைத்துமுடித்துவிட்டு, அப்பாடா என்று ஓய்ந்து உட்காரும் நேரம் மறுபடியும் மாவு பிசைந்து, அடுப்படியில் நிற்கும் கொடுமை இருக்கிறதே, என் எதிரிக்கு கூட வரக்கூடாது.

இடையிடையே, நார்த், சைனீஸ், இத்தாலி இப்படி பல வட்டார உணவுகளை சமைத்து வைத்தால்தான் இந்த சமூகம் அந்த பெண்களை ` சிறந்த குடும்பத்தலைவி` என்று ஒத்துக்கொள்ளும்.

இப்படியாக நானும் சராசரி குடும்பத் தலைவியாக நல்ல பேர் எடுக்க முயற்சித்து நொந்துபோனதுதான் மிச்சம். அதில் கற்றுக் கொண்டது என்னவென்றால், என்னதான் வகைவகையாக சமைத்தாலும், நாளைக்கு என்ன சமையல் என்றுதான் எதிர்பார்ப்பார்களே தவிர, `அய்யோ பாவம்` எதுக்கு கஷ்டப்பட்டு இவ்வளவு செய்கிறாய் என்று யாருமே சொல்லமாட்டார்கள் என்பதுதான்.

சிவாஜி படத்தில் ரஜினி சொல்வாரே, அதுபோல இது வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சர் வேற லெவலில் இருக்கும். அதற்கு பேர் `ஸ்நாக்ஸ்`. கொறிப்பதற்கு என்றே எதாவது நொறுக்குத்தீனி செய்து, சில்வர் சம்படம்/தூக்குவாளியில் போட்டு வைத்திருக்க வேண்டும். திடீரென்று விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு டீ காப்பியோடு சேர்த்து பஜ்ஜியோ பக்கோடாவோ செய்துதர வேண்டும். எவ்வளவு சீக்கிரத்தில் செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உறவினர்கள் மத்தியில் நம்ம ரேங்க் உயரும்.  இதில் இன்னொரு குரூப் இருக்கிறது. 5 மணிவாக்கில் வர்றேன் என்பார்கள். ஆனா ஏழே காலுக்குத்தான் வருவார்கள். டின்னர் வரைக்கும் இருப்பார்களா இல்லை உடனே கிளம்பிவிடுவார்களா என்று கேட்க முடியாது.

அவர்களுக்கும் சேர்த்து சமைத்தால், “இல்லை இன்னொரு நாள் சாப்பிடறேன்“ என்று கிளம்பிவிடுவார்கள். சரி டீ குடுத்து அனுப்பிவிடலாம் என்று நினைத்தால், “என்ன வீட்டிற்கு வந்தவனை வெறும் வயிற்றோடு அனுப்பறீங்க“ என்று காலைவாரி விடுவார்கள். விருந்தினர்களோடு நடக்கும் கூத்தை எழுதி புத்தகமாகப் போட்டால், ராமாயணத்தைவிட அதிகம் கிளைக்கதைகள் கொண்ட நூலாக இருக்கும். நல்லவேளை கடந்த சிலவருடங்களாக ஊபர் ஈட்ஸும், ஸ்வேகியும் சேவைசெய்து பல பெண்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளன. திடிரென்று வீட்டிற்கு யாரும் வந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கிளிக், ஓஹோன்னு வாழ்க்கைன்னு நிம்மதியாக இருக்கலாம்.

இப்படியாக என் வாழ்க்கை போன போக்கில், பெரும்பாலான நேரம் கிச்சனில் இருப்பேன். அடுத்து என்ன சமைப்பது என்பதே என் சிந்தனையில் இருக்கும், ஒருகட்டத்தில் மசாலா பொருட்களோடுதான் நான் குடும்பம் நடத்துகிறேனோ என்று கூட தோன்றும்.

நான் கூடப் பரவாயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு அக்கா, கிச்சனில் 40 இன்ச் டி.வி ஒன்றை வைத்திருக்கிறார். ஆச்சரியப்பட்டு கேட்டால் ‘ஒரு நாளில் 16 மணி நேரம் இங்கதானே இருக்கேன்` என்பார். மாமியார், மாமனார், 3 பிள்ளைகள் என்று குடும்பம் பெரிது. எப்போதும் பாட்டுக்கேட்ட வண்ணமோ, சீரியல் பார்த்தபடியோ சமைப்பார். செய்யும் வேலையை எளிமையாக்க டி.வி துணையிருக்கிறது என்று நினைக்க வைத்தாலும், ஒரு மனுஷிக்கு டி.வி பார்க்க கூட ஓய்வு நேரம் இல்லையோ யோசிக்கவும் வைக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு, என் சமையலறையில்  அதிகம் மெனக்கெட முடியாமல் போனது. அதை கணவரும் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். ஆரம்பத்தில் சாப்பாட்டு விசயத்தில் நிறைய சண்டை வந்திருக்கிறது. இருவருடைய உணவு பழக்கங்களும், வளர்ப்பு முறைகளும் முற்றிலும் வேறாக இருந்தது.

வீட்டுவேலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்திருந்தார் என் மாமியார். காபி குடிக்கும் வரை அருகில் நின்று, குடித்து முடித்த டம்ளரை கையோடு வாங்கிக் கொண்டு செல்லவேண்டும் என்று பழக்கப்பட்டிருந்த என் கணவரிடம், என் கஷ்டங்களை சொன்னாலும் புரியப்போவதில்லை என்று உணர்ந்தபிறகு, முரண்பாடுகள் குறைந்தன.

அதே நேரம் செய்ய நினைத்த மாற்றங்களை, செயலில் காட்டினேன். காய்கள் பழங்கள் உடலுக்கு நல்லது என சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைத்தேன். வாரத்தில் 4 நாட்கள் அசைவம் 3 நாட்கள் சைவம் என்று மாற்றம் ஏற்படுத்துவதற்கு எனக்கு சில வருடங்கள் ஆனது.

தட்டு, ஸ்பூன் போன்ற சிறு பாத்திரங்களை கழுவுவது, தானே டீ காப்பி போட்டுக்கொள்வது போன்ற சில வேலைகளை செய்து பழகிக்கொண்டார் அவர். அடடே இனி நமக்கு வசந்தகாலம் தான் என்று மனதுக்குள் `லாலா லலலா“ பாட நினைக்கும் நேரம், அப்படியெல்லாம் உன்னை சும்மா விட முடியாது என்று தன் பங்குக்கு ஆட்டி வைத்தது என் குழந்தைச் செல்வம்.

தோசை சுடும் அன்று பூரி கேட்கும், பூரி செய்யும் அன்று நூடுல்ஸ் கேட்கும். இப்படியாக, குழந்தையும் தொல்லையும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று என்று பழைய பாட்டை பாடி எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

பொதுவாக கைக்குழந்தைக்கு என்று தனியாக  உப்பு, காரம் இல்லாமல் சமைத்துக் குடுப்பது ஓ.கே  இரண்டு வயது ஆனபிறகு நாம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே கொஞ்சம் நெய் சேர்த்து, காரம் தெரியாமல் குடுத்து அப்படியே நாம சாப்பிடும் அனைத்தையும் தந்து பழக்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கும் அதே நாலுபேரு சொம்பு தூக்கிக்கொண்டு வந்தாங்க.

என் பிரெண்டு ஒருத்தி 10 வயசு பையனுக்காக, காரம் சேர்க்காமல், இன்னொரு குழம்பு வைப்பாள். எதுக்கு ரெண்டு சமையல்? உங்களுக்கு சமைக்கிறதையே அவனுக்கும் குடுங்களேன் என்றால், `அதெப்படி குழந்தைக்கு (!!) நாம சாப்பிடறதை தர்றது?’ என்கிறாள். அவள் மட்டுமல்ல, என் தோழிகள் பலரும் ஸ்கூல் போகும் தங்கள் பிள்ளைகளுக்குஎன்று தனியாக ஒரு சமையல் செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் `மகளுக்கு ஒழுங்கா சமைச்சுப் போடாதவள்` என்ற கெட்ட பெயர் எனக்கு உண்டு.

என் மகள் வேறு, அவள் வயது சிறுமிகளோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் எடை குறைவாக இருப்பாள். இது போதுமே!. `ஒழுங்கா சமைக்கறது இல்லை. சத்தான சாப்பாடு குழந்தைக்கு தர்றது இல்லை, குடும்பத்தில அக்கறை இல்லை` இப்படி பல `இல்லை` என்று உற்றார் உறவினர்கள் என்னைக் கரித்துக் கொட்டுவார்கள்.

ஸ்ஸப்பா… எங்க சுத்தி எங்க போனாலும் என் சமையலிலேயே வந்து நிற்கிறதே என் உலகம்..

அன்பான பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே… முடியல.. என்னால முடியலடா சாமி.

இப்படிக்கு உங்களில் ஒரு இல்லத்தரசி.

  • பிரேமா மகள்

Related posts

பிரான்சு: நிஜமும் நிழலும் !

Editorial

டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ?

Editorial

அயல்நாடுகளில் தடம் மாற்றப்படுகிறதா தமிழ் கலாச்சாரம்?

Editorial

கொரோனா பூனை !

அகர முதல !

editor

பிரெஞ்சு தேசிய நாள், ஜூலை 14 : வரலாறும் நிகழ்வும்

Editorial

Leave a Comment