9.4 C
France
May 20, 2024
god-stays-kumaru-post
சிறுகதைகள்

கடவுள் இருக்கான் குமாரு : பிரேமா மகள்

கோவிலில் இருந்து வரும் வழியில் ”அம்மா, அம்மா அங்க பாருங்க” என என் மகன் கிஷான் ஆர்ப்பரித்து கைகாட்ட, நானும் சாலை ஓரமாக இருந்த முள் செடியைப் பார்த்தேன். பிறந்து ஓரிரு நாட்களான குட்டி நாய்கள் அந்த மொட்டை வெயிலிலும் இதமாய் கண்மூடி படுத்திருந்தன. தாய்நாய் அருகில் இல்லாததால் தைரியமாய் அருகில் சென்று, ஒரு குட்டியை கையில் தூக்கினேன். ஒருகண் விழித்து பார்த்துவிட்டு, இன்னும் வசதியாய் என் உள்ளங்கையில் படுத்துவிட்டது.

”வீட்டுக்கு கொண்டு போகலாமா” என்றதும் மகனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். ”சோ கியூட் ” என்று நூறு முறையாவது சொல்லியிருப்பான். கைகளில் தூக்க பயந்து, அதன் தலையை தடவியபடி என்னுடன் நடந்து வந்தவனுக்கு தலைகால் புரியவில்லை.

சின்னவயதிலிருந்தே நான் இப்படித்தான். பிறந்து வளர்ந்தது கிராமமானதால் நாய், பூனைன்னு எந்த குட்டியைப் பார்த்தாலும் வீட்டுக்கு தூக்கி வந்துவிடுவேன். அதெல்லாம் ஆயகலைகளுள் ஒன்று. திட்டம் போட்டு, தாய் நாய்/பூனை வெளியே செல்லும் நேரம் பார்த்து காத்திருந்து குட்டியை களவாடுவதோடு, முரண்டுபிடிக்கும் குட்டியை, பால் ஊற்றி பராமரித்து நட்பாக்க தனி திறமை வேண்டும். பதின்பருவம் எய்தும் வரை, 7 நாய் குட்டிகளையும், 3 பூனை குட்டிகளையும் இப்படி தூக்கி வளர்த்திருக்கிறேன். ஒரு தாய் பூனை என் புறங்கையில் கீறி காய்ச்சலில் 4 நாள் படுத்திருந்தேன். ஒருமுறை குட்டியை தேடிவந்த நாய் துரத்தி, கீழே விழுந்து நெத்தியில் அடிபட்ட தழும்பு இன்னும் இருக்கிறது.

மகனுக்கு இதெல்லாம் சொன்னால் புரியுமான்னு தெரியவில்லை. லண்டனில் பிறந்தவனுக்கு இதுவரைக்கும் நாயை கையால் தொட்டுபார்க்கும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. சாலைகளில் கடந்து செல்லும் நாய்களுக்கு, ”ஹலோ” சொல்வதோடு சரி. நாயின் உரிமையாளர்கள் அவற்றை தொட அனுமதிப்பதில்லை. எங்கள் நண்பர்கள் உறவினர்கள் என யார் வீட்டிலும் நாய் இல்லாததால், 5 வயதில் இப்போதுதான் நாயை முதன் முதலில் தொட்டுப் பார்க்கிறான்.

என்னுடைய ஐந்து வயதில், வீட்டு வாசலில் நின்று, “மணி, மணி” என்று குரல் குடுத்தால் எப்படியும் 2 நாயாவது ஓடிவந்து காலடியில் நிற்கும் நினைவுகளை ரசித்தபடி, வீட்டிற்கு வந்தேன்.”அப்பம்மா இங்க பாருங்க, பேபி நாய் கூட்டி வந்திருக்கோம்” என்று சந்தோஷ கூச்சலிட்டபடி என் மாமியாரிடம் ஓடினான் கிஷான்.

“என்னடா பண்ணிட்டு வந்திருக்கீங்க, ஆத்தாளும் மகனும்” என்றபடி வந்த எம் மாமியார், முற்றத்திலிருக்கும் நாய்குட்டியை பார்த்து முகம் சுளித்தவாரே.”என்ன கருமம் இது, கண்டதையும் உள்ளவிட்டுக்கிட்டு, இதென்னா வீடா?” என்று குரல் உயர்த்தினார்.

“இல்லத்த, உங்க பேரன் ஆசைப்பட்டான். லீவ் முடியும்வரை இதுவும் இருக்கட்டும். நாங்க லண்டன் போகும்போது”ன்னு நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக மீண்டும் கத்த ஆரம்பித்தார் என் மாமியார். “ஏன்டா, உன் பொண்டாட்டி என்ன செஞ்சாலும் கேக்க மாட்டியா? அப்படி மயக்கி வைச்சிருக்காளா? உனக்கே எதெது கூட எந்தளவுக்கு பழகணும்ன்னு தெரியாது. தாராதரம் தெரியாம பழகி, தரங்கெட்டத தலையில வைச்சிருக்க”ன்னு என் கணவரிடம் முறையிட, அவரோ கருமமே கண்ணாக,முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

மாமியார் மருமகளுக்குள் எந்த வாக்குவாதம் நடந்தாலும், அதில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கிறாராம். “பெண்கள் இன்னிக்கு முறைச்சுக்குவாங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க. இடையில் வரும் ஆண்கள் பாடுதான் பாவம்” என்பது அவர் வாதம். இது ஒருவகையில் தப்பிதல்த்துவம். யார் மனவேதனைப்பட்டால் எனக்கென்ன, தன் தட்டில் சோறு விழுந்தா சரி என்னும் சுயநல மனோபாவம். இது எனக்கு பழகிப்போன ஒன்றானதால், என் மாமியார் என்னை தரம் கெட்டவள் என்றது புரிந்தும், நாய்குட்டிக்கு ஊற்ற பால் எடுக்க சமையலறைக்குச் சென்றேன்.

“அம்மா, தெருவுல இருக்கறத அப்படியே உள்ள விட்றாத, நாயா இருந்தாலும் நல்ல சாதியா இருக்கணும். இல்லாட்டி நமக்குத்தான் அசிங்கம்” என்றார் படுக்கையறையிலிருந்து வெளிவந்த என் நாத்தனார். இவளும் என்னைப் போல காதலித்து திருமணம் செய்துகொண்டவள்தான். என்ன ஒரே சாதி மாப்பிள்ளை என்பதால் அதை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக்கி, வரதட்சணை தந்து காதலுக்கு கோட்டை கட்டிவிட்டார்கள்.

இன்னிக்கு என்னை குத்திப் பேசும் என் நாத்தனார், லண்டனிலிருந்து நான் வாங்கி வந்த கோல்டன் வாட்சையும் சைபர் ஷாட் கேமராவையும் பல்லிளித்தபடி வாங்கிக் கொண்டதோடு, அடுத்த முறை வரும்போது ஹோம் தியேட்டர் செட் வாங்கிவர சொல்லி ஆணையிட்டிருக்கிறாள். அதுசரி, மனுசனுக்கு மட்டும்தான் சாதி. அவன் வாங்கித் தரும் பொருட்களுக்கு இல்லை.

வம்புச் சண்டைக்கு தயாரா இருக்கறவங்கிட்ட வாய் குடுக்காம, சின்ன கிண்ணத்தில் குட்டிக்கு பால் ஊத்தி வைச்சேன். முதலில் குடிக்க தெரியாமல் கஷ்டப்பட்ட குட்டி, ஒருவழியா குடிக்க ஆரம்பிச்சதும் மகனுக்கு உற்சாகம் கூடிவிட்டது.

எம் மாமியார் பேசிய தமிழ் சொற்களை புரிஞ்சுக்க முடியாவிட்டாலும், ஏதோ திட்டறாங்க என்ற அளவில் அறிந்து மனம் வாடி நின்றான். நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் குட்டிக்கு பால் ஊற்றியதும், அதனுடன் விளையாட துவங்கிவிட்டான். வயிறு நிறைந்த திருப்தியில் குட்டி கூச்சலிட அவர்களோடு நானும் விளையாட ஆரம்பித்து பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது.

“ச்சை, ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு பொறந்த வீட்டுக்கு வந்தா, மனுசன நிம்மதியாய் இருக்கவுடாம ஒரே வால்வால்ன்னு கண்ட நாயும் தொந்தரவு பண்ணுது, நாங்க எங்க வீட்டுக்கே போறோம். நீ நாய்க்கு பத்தியம் பாரு”ன்னு நாத்தனார் மாமியாரிடம் முறையிட, எரிச்சலில் வாசலுக்கு வந்த மாமியார்,”கத்தாம சும்மா கிட”ன்னு கோபத்தில் எட்டி உதைத்ததில் நாய்க்குட்டி வாசல் சுவற்றில் மோதி கீழே விழுந்து ஊருக்கே கேக்கும்படி கத்தியது.

“இந்தா, இந்த எழவை கொண்டுபோய் ரோட்டிலேயே விட்டுட்டு வா. எல்லாத்துக்கும் வடிச்சு கொட்ட, இங்கொன்றும் கொட்டி கிடக்கல” என்றார். நாயை அவர் உதைத்ததும் மகனுக்கு கோபம் வந்து, “அப்பம்மா, பேபி நாயை ஏன் அடிக்கிறீங்க, சாரி சொல்லுங்க, பாருங்க அதுக்கு காலில் ரத்தம் வருது”னு சொல்ல, அவனை பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

“அம்மா, பேபி நாயை ஹாஸ்பிட்டல் கூட்டி போகலாம்” என்றான் கிஷான். நாய்க்கு காலில் கட்டு போட்டுவிட்டதோடு, மீண்டும் புதர் அருகிலேயே விடலாமென சொன்னதும். அவனுக்கு ஒரே அழுகை. “பிளீஸ் மா, பிளீஸ் மா”ன்னு கெஞ்சியதையும் தாண்டி நான் மட்டும் குட்டியை தூக்கிச் சென்று புதரில் விட்டுவிட்டு வரும்போது எனக்கும் அழுகை வரும்போல இருந்தது.

அன்று ராத்திரி வரை அடம் பிடித்த கிஷான் அழுதுகொண்டே சாப்பிடாமல் படுத்துவிட்டான். “குட்டியை காணாமல், அவங்க அம்மா நாயும் பிரதர் நாயும் தேடுவாங்க” என்று நான் சொன்ன எந்த சமாதானமும் அவனிடம் பலிக்கவில்லை.

தூக்கத்தில் கூட, பேபி நாய்க்கு கால் வலிக்கும்-ன்னு புலம்பினான். குழந்தையாகவே இருந்துவிடலாம்ன்னு சில சமயம் நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் தாங்கும் சக்தியில்லை.

சரியாக 2 நாள் கழித்து, காலை ஏழு மணி இருக்கும். எங்கோ “க்கிவ், க்கிவ்” என்று ஏதோ கத்தும் சத்தம் கேட்டு நானும் கிஷானும் கண் விழுத்தோம். ஏதோ பழக்கமான சத்தமாக தெரிந்தாலும் சட்டென பிடிபடவில்லை. பல் விளக்கிவிட்டு வந்ததும் எம் மாமியார் கையில் காபியோடு வந்தார். காலை டிபனுக்கு வெங்காய தோசை என்பதால், “பசிக்கும் போது சொல்லு. ஊத்தி தரேன்” என்றவர் எங்கள் படுக்கையிலிருந்த தலையணை, உறை, பெட்ஷீட் எல்லாம் துவைக்க எடுத்துச் சென்றார்.

ஒருவகையில் எம் மாமியார் பரவாயில்லாத குணம்தான். ஆனாலும் வேலைக்காக லண்டன் போன தன் மகன், அங்கு படிக்க வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுதான் பிடிக்கவில்லை. என்னதான் தங்களை விட வசதியான குடும்ப பெண்ணாக இருந்தாலும், தங்கள் சாதிக்கு நிகரான சாதியாக இருந்தாலும், ஏதோ ஒருவகையில் மருமகளை தாழ்வாக நினைக்கும் குணம். இது மாமியாருக்கே உரிய பொது குணம் என்பது திருமணமாகி சில மாதங்களில் புரிந்தது.

லண்டனில் கணவரோடு தனிக்குடித்தனம் வாழ்வதால், எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் போனிலும் நேரிலும் பேசும் போது, வரும் குத்தல் பேச்சுகளை மட்டும் தாங்க முடியாது.

கிணற்றடியில் மாமியார் துணி ஊறவைக்க, துவைக்கும் கல்லில் வசதியாக உட்கார்ந்துகொண்டு காபி குடிக்கும் போது, மீண்டும் அந்த “க்கிவ், க்கீவ்” சத்தம் கேட்டது.எங்கிருந்து சத்தம் வருதுன்னு நானும் மகனும் தேட, மாமியாரோ கடப்பாறையை முழுங்கிய மாதிரி உர்ன்னு இருந்தார். ஏதோ சரியில்லையேன்னு மனதுக்குள் நினைத்தபடி தேடும் போதுதான் விறகு பட்டறைக்கு உட்புறமா அந்த சத்தத்தை கண்டுபிடிச்சோம். குனிஞ்சு பார்த்தா, பளிங்கு கண்கள் மின்ன ஒரு தாய் நாயும் கண் திறக்காத நாலு நாய் குட்டிகளும் இருந்தன. “வாவ்“ன்னு நானும் மகனும் வாய்விட்டு கத்தும் போதும், என் மாமியார் அதே “உர்” தான்.

எங்கியோ சுத்திகிட்டிருந்த தெருநாய், குட்டி போட பாதுகாப்பாக மாமியார் வீட்டு விறகு பட்டறையை தேர்ந்தெடுத்திருக்கிறது. விடியற்காலையில் கிணற்றடிக்கு வந்த மாமியார் இதை பார்த்துவிட்டு நாயை துரத்த முயற்சிக்க, கடிக்க பாய்ந்திருக்கிறது. பயத்தில் அப்படியே விட்டுட்டாங்களாம். நடந்த சம்பவத்தை அவங்க சொல்லும் போது, விளக்கெண்ணைய் குடிச்ச மாதிரி திரு திருன்னு முழிக்கவும், எனக்கு சிரிப்பு தாங்கல.

என்னதான் சாம, தான, பேத, தண்ட முறைகளை கையாண்டும், பக்கத்தில் போக தாய் நாய் விடவில்லை. ஆனா மகன் பேசின தங்கிலிஷ் புரிஞ்சுதோ என்னவோ அவனை மட்டும் அருகே விட்டது. ஆசை தீர நாய் குட்டிகளை தடவி கொஞ்சினான். முதல் சில நாட்கள் தாயிடம் பால் குடித்த குட்டிகளுக்கு கிண்ணத்தில் பால் வைத்தான். இந்த விடுமுறை புது நண்பர்களோடு சிறப்பாய் கொண்டாடினான். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான் எல்லாவற்றிலேயும் பெரிய சந்தோஷம். அந்த வகையில் என் மகனுக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தாய் நாய் தந்தது.

ரெண்டு வாரம் கழித்து நாங்கள் லண்டனுக்கு கிளம்புவதற்கு முதல் நாள் தான், குட்டிகளோடு தாய் நாய் வேறிடம் மாறியது. ஒரு நாய் குட்டி தூக்கிவந்ததற்கு குற்றவாளி கூண்டில் எங்களை ஏற்றிய மாமியாரும் நாத்தனாரும் இஞ்சி தின்ற ஏதோ ஒன்றுபோல் ஆனார்கள்.

எளியவர்களின் அன்பு ஒருநாளும் நிராகரிக்கப்படுவதில்லை. கடவுள் இருக்கான் குமாரு.

  • பிரேமாமகள்

Author

  • பிரேமா மகள்

    வழக்குரைஞர், முன்னாள் ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர், இங்கிலாந்து வாழ் எழுத்தாளர்.

    View all posts

Related posts

கன்னிகழியாச் சாமி

வளவ. துரையன்

கோப்பையில் தெரிவது!

Editorial

Leave a Comment