10.5 C
France
April 27, 2024
கட்டுரைகள்

புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ்

புதுவையைக் கலக்கும் விண்டேஜ் புகைப்படக்கலைஞர்!

புதுச்சேரியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு.கருணாகரன் பெரும்பாலும் வின்டேஜ் லென்சுகளில் தான் இன்றும் படம் பிடித்து வருகிறார்.

பிரான்சில் வசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இவர் FLICKR இணையதளத்தின் வாயிலாக அறிமுகமானவர். மேலும் நாங்கள் இருவருமே புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் எங்களின் நட்பு மேலும் வலுவுடன் தொடர்ந்தது. புதுச்சேரி புகைப்படக்கலைஞர் பலருக்கும் இவர் நன்கு அறிமுகமானவர்.

இவரிடம் பேசிய போது நான் என்னிடம் இருக்கும் பழைய 1980 காலங்களில் வெளியான ஜெர்மானிய தயாரிப்பான  Praktica B100 என்ற கேமராவில் இருக்கும் Pentacon pancake லென்ஸ் பற்றி குறிப்பிட்டேன். அப்போது அவர், ‘தாங்கள்  இந்தியா வரும்போது லென்சை எடுத்து வாருங்கள். நான் அதனை உங்களது கேனான் டிஜிட்டல் கேமராவில் பயன்படுத்த ஏதுவாக வடிவமைத்துத் தருகிறேன்’ என்று கூறியதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், பழைய Helios போன்ற லென்சுகளுக்கு M42 மவுண்ட்கள் சந்தையில் கிடைத்தாலும், என்னிடம் இருக்கும் Pentacon லென்சுக்கு எப்படி பொருந்தும் என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான் இந்தியா சென்றிருந்தபோது, அவரை சந்தித்து லென்சைக் கொடுத்துவிட்டேன்.

சுமார் 5 நாட்களில் என்னை அலைபேசியில் அழைத்து உங்கள் லென்ஸ் ரெடி என கூறியதும் என்னால் நம்ம முடியவில்லை. காரணம் எனக்கான அடாப்டரை அவரே செய்து கொடுத்திருந்தார்.

பின்னர் அவருடனே புதுச்சேரி கடற்கரைக்குச் சென்று அந்த பழைய லென்சை எனது கேனான் டிஜிட்டல் கேமராவில் பொருத்தி படமெடுத்த அனுபவங்கள் இன்றும் நினைவில்  நிற்கின்றன.

அதன்பிறகு தான் அவரை பற்றியும் அவரின் இந்த வின்டேஜ் லென்ஸ்களில் படம் பிடிக்கும் அனுபவத்தை நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

திரு.கருணாகரன் அவர்களுக்கு முதலில் புகைப்பட கலையில் ஆர்வம் வந்ததே பள்ளியில் ஏற்பாடு செய்யும் சுற்றுலாக்களுக்கு அவரது பள்ளித்தோழர்களுடன் செல்லும்போது தான்.

அவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவரது பள்ளி நண்பர் சுற்றுலாவிற்கு கொண்டுவந்த Photophone Hot Shot 110 என்ற கேமராவில் தான் முதன்முதலில் இயற்கை காட்சிகள், மற்றும் அவருடைய நண்பர்களை படம் பிடிக்கத் தொடங்கியுள்ளார். கேமரா அவரது நண்பருடையதாக இருந்தாலும் அந்த கேமராவை அவர் கருணாகரனிடம் கொடுத்தே படம் பிடிக்க சொல்லுவாராம்.

இப்படியாக புகைப்படம் எடுக்கும் வழக்கம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர, அவருக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த பின், முதன் முதலாக Canon AE-1 Program என்ற கேமராவை வாங்கி அதில் படம் பிடிக்க தொடங்கியுள்ளார். மேலும் அக்கேமரா மூலமாக சிறு சிறு நிகழ்ச்சிகளை படம் பிடித்து, அதன் மூலம் சற்று வருமானமும் ஈட்டியுள்ளார்.

பரத நாட்டிய நிகழ்ச்சி, பிறந்தநாள் விழா போன்ற நிகழ்வுகளை படம் பிடித்து, அதனை லேபில் கொடுத்து டெவலப் செய்து பிரிண்டு போட்டு ஆல்பமாகவும் வழங்கி வந்துள்ளார்.

அவருக்கு புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தாலும், புகைப்படக் கலையில் ஆர்வம் குறையாததால் விடுமுறை நாட்களில் நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் தொழிலையும் பகுதி நேரமாக பார்த்து வந்துள்ளார்.

இவ்வாறாக அவரது புகைப்பட வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கையில், புகைப்பட உலகமோ டிஜிட்டல் கேமராக்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

பிலிம்ரோல்களை வாங்குவதில் சிரமம், அதனை லேபில் கொடுத்து டெவலப் செய்வதும் என செலவுகள் அதிகமாகின. இந்நிலையில் தான் 2007 ஆம் ஆண்டு Canon EOS 350D கேமராவை வாங்கினார் கருணாகரன்.

டிஜிட்டல் கேமராவில் படம் பிடிக்க துவங்கியதும், அவரிடம் ஏற்கனவே இருந்த பழைய பிலிம் ரோல் கேமராக்கள் மற்றும் லென்சுகளை பயன்படுத்த இயலவில்லையே என வருந்தியுள்ளார். மேலும் பிலிம் ரோலில் கிடைக்கும் அந்த தரம் டிஜிட்டலில் கிடைக்கிறதா எனவும் சிந்தித்துள்ளார்.

மேலும் பழைய லென்சுகளில் கிடைக்கும் அந்த தரத்தை (bokeh, sharpness, color tone) டிஜிட்டலிலும் கொண்டு வர வேண்டும் என நினைத்த அவர், அதற்கான முயற்சியில் இறங்கியுனார். தனது Canon EOS 350D கேமராவுக்கான பழைய லென்ஸை பொருத்த தானாகவே ஒரு மவுண்டை உருவாக்கியுள்ளார். அதனை அவரது கேமராவில் படம் பிடித்து அந்த பழைய லென்சுகள் கொடுக்கும் தரத்தை அப்படியே டிஜிட்டலில் கொண்டுவந்துள்ளார். தன்னுடைய சோதனை வெற்றியடைந்தால் மகிழ்ச்சியடைந்த கருணாகரன், அவரிடம் மேலும் இருந்த பழைய கேனான் FD லென்சுகள் மற்றும் m42 வகை லென்சுகளுக்கான மவுண்டையும் உருவாக்கி பயன்படுத்தத் துவங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட பழைய லென்சுகள் அளிக்கும் தரத்தை தனது டிஜிட்டல் புகைப்படக் கலையில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். அந்த வகையில் முழு திருப்தியடைந்த திரு.கருணாகரன், மேலும் பல பழைய லென்சுகளை  வாங்கி அதற்கு மவுண்டும் உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இவரது லென்ஸ் வேட்டையில் பல லென்சுகள் பழைய கேமராக்களுடன் கிடைத்திருக்கின்றன. எனவே லென்சுகளை சேகரிக்க வேண்டி கேமராவையும் சேர்த்து வாங்கியுள்ளார். பின்னர் பழைய கேமராக்கள் மீதும் ஈர்ப்பு வர அவற்றையும் வாங்கத் துவங்கியுள்ளார்.

பழைய கேமராக்களில் Twin-lens பிலிம் கேமராக்கள், 35mm பிலிம் கேமராக்கள், 110 வகை பிலிம் கேமராக்கள், Half-Frame பிலிம் கேமராக்கள் என வாங்க வாங்க இவருக்கு பழைய கேமராக்களையும் சேகரிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

நான் ஒவ்வொறு முறையும் விடுமுறைக்காக இந்தியா செல்லும் போது இவருடன் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், மரக்காணம் உப்பளம் போன்ற இடங்களுக்கு புகைப்பட நடை செல்வதுண்டு. அப்போது அவர் டிஜிட்டல் கேமராவுடன் பிலிம் கேமராவும் உடன் கொண்டு வந்து புகைப்படமெடுப்பார். எங்களது புகைப்பட பயணம் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இன்றும், புகைப்படக் கலைக்குள் புதியதாய் இணையும் இளைஞர்களுக்கு பிலிம் ரோல் கேமரா பற்றிய புரிதலை ஏற்படுத்துவதோடு, அவர்கள் பிலிம் ரோலில் புகைப்படம் எடுக்கவேண்டுமென விரும்பினால் தன்னிடம் இருக்கும் பழைய பிலிம் ரோல் கேமராவையும் கொடுத்து உதவுகிறார்.

மேலும் இன்றைய இளைய தலைமுறை புகைப்படக் கலைஞர்கள் பழைய கேமராக்கள் மற்றும் பிலிம் போட்டோகிராபி பற்றி தெரிந்துகொள்ள ஏதுவாக அவரது நண்பர் மற்றும் புகைப்படக்கலைஞர் திரு.நிரஞ்சன் அவர்களுடன் இணைந்து https://www.youtube.com/@karunasvintageedition638/videos என்ற வீடியோ சேனலையும் யூடியூபில் நடத்தி வருகிறார்.

எதிர்காலத்தில் எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் புகைப்படக் கலையில் வந்தாலும் பழைய பிலிம்ரோல் கேமராக்களையும், பழைய லென்சுகளையும் கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தக் கூடாது என கூறுகிறார் திரு. கருணாகரன். அவரது எண்ணங்கள் பலிக்கவும் அவரது புகைப்படக்கலை மேலும் சிறக்கவும் வாழ்த்துவோம்.

பேட்டி & கட்டுரை :

நித்தி ஆனந்த்,
புகைப்படக்கலைஞர்,
பாரிஸ், பிரான்ஸ்.

Related posts

பிளாக் செப்டம்பர் – சரத்

Editorial

09/11/2001 – ஒரு பதிவு

சரத்

தகவல் அரசியல் : வினோத் ஆறுமுகம்

Editorial

மோனாலிசாவின் மாயப்புன்னகை !

சரத்

பெண்கள் குழாயடி சண்டை போட வேண்டும் !

Shalin Maria Lawrence

புதுவையில் பெண்ணுரிமை காக்க பாேராடிய பெண் போராளி!

Editorial

1 comment

Mohamed Rafi November 11, 2023 at 3:01 am

மிகச்சிறந்த கலைஞர், அருமையான கட்டுரை.
வாழ்த்துக்கள் கருணாகரன் சார்.

Reply

Leave a Comment