13.1 C
France
May 28, 2023
teacher-killed-in-France-condolences
செய்திகள்

பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் உடல் அடக்கம் : மக்ரோன் அஞ்சலி !

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் (Samuel Pati) இறுதி அஞ்சலி வைபவம் இன்று சொர்போன்(Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

இல் தெ பிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹொலந்து மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

Pc : Francois Mori
ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சிபூர்வ கடிதம்!

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..
உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று தனது 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன், தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

குமாரதாஸன்
பாரிஸ்.
21-10-2020
புதன்கிழமை

படங்கள் : AFP, Francois Mori

Related posts

அங்காடிகளில் குவிந்த மக்கள் : ஊரடங்கு செய்தி எதிரொலி?

Editorial

பிரான்ஸ் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு!

Editorial

கீழடி அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு!

Editorial

கட்டாய தடுப்பூசி, சுகாதார பணியாளர்களுக்கு முக்கிய விதிகள், பொது இடங்களில் உலவ கட்டாய சுகாதார அட்டை : புது கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரான்சு

Editorial

பிரான்சு தமிழ் சங்க துணைத் தலைவருக்கு தமிழக அரசின் இலக்கிய விருது !

Editorial

பிரெஞ்சு தேசிய நாள், ஜூலை 14 : வரலாறும் நிகழ்வும்

Editorial

Leave a Comment